News

Thursday, 01 June 2023 10:55 AM , by: Muthukrishnan Murugan

ஒன்றிய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில், ₹640 கோடி மதிப்பீட்டில் 58,000 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

வேளாண் நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டது என்ன?

ஒன்றிய அரசின் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில், 420 கோடி ரூபாய் மதிப்பிலான 40,000 மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காய் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வரும் கொள்முதல் பருவத்தில், 640 கோடி ரூபாய் மதிப்பிலான 56,000 மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காயினை ஒன்றிய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் (Minimum Support Price) தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத்துடன் (NAFED) இணைந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் நிதி நிலை அறிக்கையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். அதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு-

72 முதன்மை கொள்முதல் நிலையங்கள்:

2023-2024 ஆம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு எண்.53-இன் படி, 640 கோடி ரூபாய் மதிப்பிலான 56,000 மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காயினை ஒன்றிய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் (Minimum Support Price) கொள்முதல் செய்ய 71 முதன்மை கொள்முதல் நிலையங்களோடு சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தையும் சேர்த்து 72 முதன்மை கொள்முதல் நிலையங்களில் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி, தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத்தால் (NAFED) கொப்பரை கொள்முதல் செய்ய வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிக இயக்குநருக்கு நிர்வாக அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

கொள்முதலில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்:

  • கொள்முதல் முடிந்தவுடன், விலை ஆதரவுத் திட்டத்திற்காக மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளரிடம் உள்ள மூலதன நிதியிலிருந்து விவசாயிகளுக்கு மின்னணு பணப்பரிவர்த்தனை செய்யப்பட வேண்டும்.
  • கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரையினை, மத்திய கிடங்கு நிறுவனம் அல்லது மாநில கிடங்கு நிறுவனத்திடம் உள்ள கிடங்குகளில் இருப்பு வைக்க வேண்டும்.
  • ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள கிடங்குகள், மத்திய கிடங்கு நிறுவனம் அல்லது மாநில கிடங்கு நிறுவனத்தால் கையாளப்பட்டால், கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரைக்கான கிடங்கு வாடகையினை பெற்றுக்கொண்டு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.
  • கிடங்கு இரசீது பெறப்பட்டவுடன், தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத்திடமிருந்து, விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பணத்தை மாநில அளவிலான- ஒருங்கிணைப்பாளர் மீள பெறவேண்டும்.
  • மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளரால் இடைநிகழ்வு செலவினத்தை இறுதி செய்ய தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு சமர்ப்பிக்கப்படும் கருத்துருவின் அடிப்படையில், கையாளப்படும் செலவுகளான, சாக்குப்பைகள் ஏற்றுதல், இறக்குதல், சுத்திகரிப்பு, தரம் பிரித்தல், போக்குவரத்து, இதர செலவுகள் மீள பெற வேண்டும்.
  • கொள்முதல் செய்வதற்கு, மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர், தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத்தோடு ஒப்பந்தம் செய்து இருக்க வேண்டும்.

மேலும், இந்நிர்வாக ஆணையினைத் தொடர்ந்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த மாதாந்திர முன்னேற்ற அறிக்கையை அரசுக்கு அனுப்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் காண்க:

LPG சிலிண்டரின் விலை தொடர்ந்து 3-வது மாதமாக அதிரடி குறைப்பு !

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)