சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணம் எழுதுபவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் நுழையக்கூடாது என்கிற உத்தரவினை அனைத்து சார்பதிவாளர்களும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைபெறும் பதிவுப் பணிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்திடும் நோக்கிலும், ஊழலை தடுத்திடும் நோக்கிலும், கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பதிவு அலுவலகங்களுக்குள் ஆவணம் எழுதுபவர்கள் மற்றும் இடைத்தரகர்களை அனுமதிக்கக் கூடாது எனவும், ஆவணம் எழுதுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இச்சுற்றறிக்கைகளின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட துணை பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் மாவட்டப் பதிவாளர்கள் தாங்கள் மேற்கொள்ளும் திடீராய்வுகளின்போது ஆவணம் எழுதுபவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்குள் வருவது தவிர்க்கப்படுகிறதா என்பதை கண்காணித்து வருகின்றனர்.
ஏற்கெனவே வழங்கப்பட்ட அறிவுரைகளோடு கூடுதலாக கீழ்கண்ட அறிவுரைகள் பின்பற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது:
- அலுவலக நிமித்தமாக சார்பதிவாளரால் அழைக்கப்பட்டால் தவிர அலுவலகத்திற்குள் ஆவணம் எழுதுபவர்கள் நுழையக்கூடாது என்ற விதியினை சார்பதிவாளர்கள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
- இந்த அறிவுரைகளை மீறி சார்பதிவாளர்கள் அலுவலகங்களுக்குள் ஆவணம் எழுதுபவர்கள் மற்றும் இடைத்தரகர்களின் செயல்பாடு/நடமாட்டம் கண்டறியப்படின் சம்மந்தப்பட்டவர்கள் மீது தமிழ்நாடு ஆவண எழுத்தர்கள் உரிம விதிகள், 1982-இன் விதி 16 மற்றும் பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கைகளின் கீழ் உரிய மேல்நடவடிக்கை எடுக்கப்படும்.
- விதிமுறைகளை மீறுபவர்களது உரிமம் ரத்து செய்யப்படுவதோடு இதனைக் கண்காணித்திட தவறும் சார்பதிவாளர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்கள் அமர்வதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை ஆவணம் எழுதுபவர்கல் பயன்படுத்தாமல் இருப்பதை சார்பதிவாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
- மாவட்டப் பதிவாளர்கள் மற்றும் மண்டல துணை பதிவுத்துறை தலைவர்கல் தங்களது தீடீர் ஆய்வுகளின் போது இந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்திட வேண்டும்.
இந்த சுற்றறிக்கையினை ஆவணம் எழுதுவோர் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலக அறிவிப்பு பலகையில் விளம்பரம் செய்யவும், அனைத்து உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்களுக்கும் சார்பு செய்து ஒப்புதல் பெற்று வைத்துக்கொள்ளவும் சம்மந்தப்பட்ட மாவட்ட பதிவாளர் வழி அனைத்து சார்பதிவாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆவண எழுத்தர்கள் உரிம விதிகள் 1982-இன் கீழான விதி 9 மற்றும் 13(எ)-இன்படி வழங்கப்படும் ஆவண எழுத்தர் உரிமத்திற்கான நிபந்தனை (j)- ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், பதிவுச் சட்டம், 1908 - பகுதி XVIII-A-யில் இடைத்தரகர்களைக் கையாள்வது குறித்து விரிவான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட அறிவுரைகளை சட்ட விதிகளுக்கு இணையாக கடைப்பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
ரேஷன் கடைகளில் 30 ரூபாய்க்கு சானிட்டரி நாப்கின் விற்பனை தொடக்கம்!