தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையினை மீண்டும் திறக்க வலியுறுத்தி டெல்லியின் ஜந்தர் மந்தர் சாலையிலுள்ள கேரளா இல்லம் அருகே இன்று போராட்டம் நடைபெற்றது.
லண்டனைத் தலைமையிடமாக கொண்ட வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடியில் 1997 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையைத் தொடங்கி செயல்பட்டு வந்தது. இந்த ஆலைக்கு எதிராக பல கட்டமாக மக்கள் மற்றும் சட்டப்போராட்டங்கள் நடைப்பெற்று வந்தன. 2018 ஆம் ஆண்டு மே-22 ஆம் தேதி ஆலையை மூடக்கோரி நடைப்பெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய சூப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அதற்கு பின் இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்த நிலையில் மே-26 ஆம் தேதி ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
ஆனால் இன்றளவிலும் ஒருதரப்பினர் ஸ்டெர்லைட் ஆலையினை மீண்டும் திறக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியிறுத்தி வருகின்றனர். ஏனென்றால், இந்தியாவின் தாமிரத் தேவை மற்றும் ஏற்றுமதியில் 40% ஸ்டெர்லைட் ஆலை பூர்த்தி செய்து வந்தது. இந்த ஆலையில் நேரடியாக 5,000 பேரும், மறைமுகமாக 12,000 தொழிலாளர்களும் வேலைவாய்ப்பினை பெற்று வந்தனர். இதுதவிர ஒப்பந்த தொழிலாளர், லாரி ஓட்டுநர்கள் என பலருக்கும் வாழ்வாதாரமாக விளங்கியது. மேலும் தாமிரத் தேவையினை பூர்த்தி செய்ய இந்தியா வெளிநாடுகளில் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தான், தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கம், எம்.ஏ.கே இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் சார்பில் தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையினை மீண்டும் திறக்க வலியுறுத்தி டெல்லியின் ஜந்தர் மந்தர் சாலையிலுள்ள கேரளா இல்லம் அருகே இன்று போராட்டம் நடைபெற்றது.
துளசி அறக்கட்டளை நிறுவனர், போராட்டம் குறித்து தெரிவித்தவை: தூத்துக்குடியை சுற்றி 278 மகளிர் குழுக்கள் உள்ளன. அதில் கிட்டத்தட்ட 3000 பெண்கள் வரை உள்ளனர். ஸ்டெர்லைட் சிஎஸ்ஆர் பண்ட் மூலம் சுமார் 1000 பெண்களுக்கு சுயத்தொழில் கற்றுக்கொடுத்து தொழில் முனைவராக மாற்றியுள்ளோம். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது முதல் தற்போது வரை, பெண்களின் பொருளாதார முன்னேற்றம் முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது. மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை இயங்க ஆரம்பித்தால் தான் பெண்களின் வாழ்வாதாரத்துக்கு ஒரு வழி பிறக்கும். இது தொடர்பாக முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை வழங்க முயன்றோம் . ஆனால், அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் தான் போராட்டத்தில் இறங்கியுள்ளோம் என குறிப்பிட்டார்.
மேற்கொண்டு போராட்டத்தில் பங்கேற்ற மாணிக்கம் தெரிவிக்கையில் , ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது என்பது முற்றிலும்தவறான கருத்து. உலக நாடுகளில் தாமிர உற்பத்தியில் முதன்மை நிறுவனமாக வளர்ச்சி அடைந்து வந்தது ஸ்டெர்லைட். வெளிநாட்டு சதியால்தான் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைப்பெற்றது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது இந்தியா மீது பொருளாதார ரீதியான சர்வதேச தாக்குதல்( International economic terrorism ). இதனாலயே, சீனா இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க:
விவசாயத்துறையில் இளைஞர்கள் அதிகளவில் பங்களிக்கவும்-ஒன்றிய அமைச்சர் தோமர் வேண்டுக்கோள்
உலகை அச்சுறுத்த காத்திருக்கும் பறவை காய்ச்சல் -விலங்குகள் நல நிபுணர்கள் எச்சரிக்கை