
ஹரியானாவின் ஷம்பு எல்லையில் தொடர் போராட்டம் நடத்திய விவசாயிகளை பஞ்சாப் போலீசார் திடீரென அப்புறப்படுத்தினர்; விவசாயிகளின் கூடாரங்கள் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன; தொடர் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளதால் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஹரியானாவின் ஷம்பு எல்லையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர் விவசாயிகள். இவர்களை டெல்லியை நோக்கி முன்னேறவிடாமல் ஹரியானா மாநில அரசு தடுத்து நிறுத்தியது. இது தொடர்பாக வழக்குகளும் நடைபெற்றன
மேலும் ஹரியானாவின் ஷம்பு எல்லையில் விவசாயிகள் போராட்டக் குழு தலைவர்களில் ஒருவரான ஜக்ஜித் சிங் தல்லேவால் தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களையும் நடத்தி வந்தார். கடந்த ஓராண்டாக ஷம்பு எல்லையில் விவசாயிகள் தற்காலிக கூடாரங்களை அமைத்து தங்களது போராட்டத்தை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திடீரென பஞ்சாப் மாநில போலீசார், ஜக்ஜித் சிங் தல்லேவால் உள்ளிட்ட விவசாய சங்க தலைவர்களை அதிரடியாக கைது செய்தனர். மேலும் ஷம்பு எல்லையில் விவசாயிகள் அமைத்திருந்த கூடாரங்களையும் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர். அத்துடன் வீடுகளுக்கு செல்ல விரும்பிய விவசாயிகளை போலீசாரே பேருந்துகள் மூலம் அனுப்பியும் வைத்தனர். இதனால் ஷம்பு எல்லையில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சந்தித்த பின்னர்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது; மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசும் பஞ்சாப்பில் ஆளும் ஆம் ஆத்மி அரசும் கூட்டாக இணைந்து தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக விவசாய சங்கத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
ஷம்பு எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தியதால் இந்த பகுதியில் ஓராண்டு காலமாக போக்குவரத்தும் முடக்கப்பட்டிருந்தது. தற்போது விவசாயிகளை அகற்றிய நிலையில் அப்பகுதியில் போக்குவரத்தை சீர் செய்து இயல்பு நிலைக்கு கொண்டு வரும் பணியில் பஞ்சாப் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
Read more:
சீறிப் பாய்ந்து தண்ணீர் ஓடிய வெண்ணாறு பொலிவிழந்து வரும் அவலம்