News

Tuesday, 01 June 2021 07:13 PM , by: R. Balakrishnan

Credit : Vivasayam

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 24 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் விவசாயிகளிடம் இருந்து இதுவரை 24,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

நெல் சாகுபடி

விழுப்புரம் மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில், 2,80,072 ஹெக்டேர் நிகர சாகுபடி (Cultivation) பரப்பாக உள்ளது. மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட அனைத்து வகை பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றது. மாவட்டத்தில் 60 சதவீதம் விவசாய நிலங்கள், பருவமழையை மட்டுமே நம்பி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில், கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை (South West Monsoon) 320.49 மி.மீ., அளவும், வடகிழக்கு பருவமழை (North East Monsoon) 699.71 மி.மீ., அளவிற்கு பெய்தது.

இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களின் நிலங்களில் நெல், மணிலா, எள், உளுந்து உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்தனர். விவசாயிகள் அறுவடை செய்யும் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க அரசிற்கு கோரிக்கை விடுத்தனர்.

நெல் கொள்முதல்

மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் காரிப் பருவத்திற்கு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, விழுப்புரம் அடுத்த ஆனாங்கூர், காணைகுப்பம், தீவனுார், ஆவணிப்பூர், பனமலைப்பேட்டை, நேமூர், பனையூர், சேந்தமங்கலம், மேல்செவலம்பாடி, கெங்கபுரம் உள்ளிட்ட 24 இடங்களில் வேளாண் துறை சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகளை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் விழுப்புரம் மண்டல அலுவலகம் சார்பில் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது.

இதற்காக, விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களின் சிட்டா, அடங்கல், ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவை கொடுத்து பதிவு செய்ய வேண்டும். பின், நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கான தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகின்றது. இங்கு, சன்ன ரக நெல் குவிண்டால் ரூ. 1,958ம், மோட்டா ரக நெல் குவிண்டால் ரூ. 1,918ம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றது. இந்த 24 நேரடி கொள்முதல் நிலையங்களில் இந்த ஆண்டில் இதுவரை, 24,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் விலை

மேலும், மாவட்டத்தில் நெல் அறுவடை (Paddy Harvest) பணிகள் தொடர்ந்து வருவதால், நேரடி கொள்முதல் நிலையத்திற்கு நெல் மூட்டைகள் வரத்து அதிகரித்து வருகிறது. வெளி மார்க்கெட்டை விட இங்கு கூடுதலாக விலை கிடைப்பதால், விவசாயிகள் நெல் மூட்டைகளை, நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க

கொரோனாவால் மீண்டும் முடங்கியது தென்னங்கீற்று முடையும் தொழில்!

பருத்தி சாகுபடியை ஊக்கப்படுத்த மானிய விலையில் விதை, இடுபொருட்கள் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)