2024-25 பருவத்திற்கான ரபி பயிர் விதைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் மூலம் தெரிய வந்துள்ளது. டிசம்பர் 30, 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, மொத்த விதைப்பு பரப்பளவு 614.94 லட்சம் ஹெக்டேரை எட்டியுள்ளது, இது கடந்த ஆண்டின் (2023-2024) எண்ணிக்கையான (611.80 லட்சம்) ஹெக்டேரை விட அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலத்தில் பயிரிடப்படும் பயிருக்களுக்கான பருவம் ரபி என்றழைக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு பருவத்தில் எந்த பயிரின் விதைப்பு பாதிக்கப்பட்டுள்ளது, வளர்ச்சியடைந்துள்ளது என்பது குறித்த பட்டியலை வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஆதிக்கம் செலுத்தும் கோதுமை& பருப்பு:
ரபி பருவ பயிர் சாகுபடியில் கோதுமை தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது, முந்தைய பருவத்தில் (2023-2024) 313 லட்சம் ஹெக்டேராக இருந்த விதைப்பு பரப்பளவுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டு (2024-2025) 319.74 லட்சம் ஹெக்டேர் பரப்பளவாக உள்ளது. இந்த தகவல் டிசம்பர் 30, 2024 வரையிலானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிகரிப்பு கோதுமை விளைவிப்பதற்கான சாதகமான வானிலை நிலவியதை பிரதிபலிக்கிறது. ஆதலால், கோதுமை சாகுபடியில் ஆர்வம் காட்டியுள்ளது புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.
பருப்புகள் விதைப்பு பரப்பளவானது 136.13 லட்சம் ஹெக்டேராக உள்ளது, இது முந்தைய ஆண்டை விட (136.05) வளர்ச்சியை கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து பயறு வகைகள் (17.43 லட்சம் ஹெக்டேர்) பயிரிடப்பட்டுள்ளன. இன்னும் ரபி பருவ விதைப்பு முடிய சில மாதங்கள் இருக்கும் நிலையில், இந்த எண்ணிக்கை வெகுவாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
சோளம் மற்றும் மக்காச்சோளம் முறையே 22.24 லட்சம் ஹெக்டேர் மற்றும் 18.93 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடபட்டுள்ளன. கேழ்வரகு (0.49 லட்சம் ஹெக்டேர்), சிறுதானியங்கள் (0.15 லட்சம் ஹெக்டேர்) பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன.
எண்ணெய் வித்துக்களில் சரிவு:
எண்ணெய் வித்துக்களின் விதைப்பு 96.15 லட்சம் ஹெக்டேரை எட்டியுள்ளது, இது கடந்த ஆண்டு பதிவான 101.37 லட்சம் ஹெக்டேர் பரப்பளவை விட சற்று குறைவாகும். எண்ணெய் வித்துக்களில், ராப்சீட் மற்றும் கடுகு 88.50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த விதைப்பு பருவத்தில் இந்த எண்ணிக்கையானது 93.73 லட்சம் ஹெக்டராக இருந்தது குறிப்பிடத்தக்கது. நிலக்கடலையில் பெரிய அளவில் மாற்றமில்லை. கடந்த பருவத்தில் 3.31 லட்சம் ஹெக்டேராக இருந்த நிலையில் தற்போது 3.32 லட்சம் ஹெக்டேராக உள்ளது.
நம்பிக்கைத் தரும் ரபி பருவம்:
வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் 2024-25 ரபி பருவம் நம்பிக்கைக்குரிய போக்குகளைக் காட்டுகிறது, குறிப்பாக கோதுமை மற்றும் பருப்பு வகைகள் சாகுபடியானது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் மில்லியன் கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் வழிவகுக்கும்.
இன்னும் ஒரு சில மாதங்கள் உள்ள நிலையில், ரபி பருவம் வரும் மாதங்களில் நாட்டின் விவசாய உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read more:
வேளாண் விஞ்ஞானிகள் நியமனத்தில் முறைகேடு செய்ததா ICAR?
சிறுதானியங்களில் புதிய இரகங்கள் சாகுபடி- தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு குட் நியூஸ்!