Railway train passengers
இந்தியாவில் மிகப்பெரிய போக்குவரத்து சேவைகளில் ஒன்று தான் ரயில்வே துறை. நீண்ட தூரப் பயணத்திற்கு குறைவானக் கட்டணத்தில் செல்லும் வகையில் ரயில் சேவை அமைந்துள்ளதால் இது ஏழைகளின் வரப்பிரசாதமாகப் பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் ரயில்சேவையை சுலபமாகப் பயன்படுத்தி வந்த நிலையில் தான், கொரோனா தொற்று சமயத்தில் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. குறிப்பாக கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளால் அதிகளவிலான மக்கள் வரும் நிலையில், இதனைக்கட்டுக்குள் கொண்டுவருவதாக பொதுப்பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளும் (General coach) முன்பதிவு செய்தால் மட்டுமே பயணம் செய்ய முடியும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தான், கிழக்கு மத்திய ரயில்வே துறை, பொதுப்பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் முன்பதிவு செய்யத்தேவையில்லை என கூறியுள்ளது. குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய பயணிகளின் வசதிக்காக இந்த முடிவை கிழக்கு மத்திய ரயில்வே மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் இனி வரும் காலங்களில் ஜெனரல் கோச்சில் பயணிக்க விரும்பும் பயணிகள், டிக்கெட் கவுண்டரில் இருந்து சாதாரண டிக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு கூட ரயிலில் பயணிக்கலாம் என தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா காலக்கட்டத்திற்கு முன்னதாக எந்த நடைமுறை இருந்ததோ? அதாவது பொதுப்பெட்டிகளில் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளுடன் பயணிக்கலாம் என கிழக்கு மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை குறித்து கிழக்கு மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி வீரேந்திர குமார் தெரிவிக்கையில், சாதாரண பயணிகள் எதிர்க்கொள்ளும் சிரமத்தைக்கருத்தில் கொண்டு எந்தவொரு எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஜென்ரல் கோச்சில் பயணம் செய்தாலும் முன்பதிவு தேவையில்லை என ரயில்வே நிர்வாகம் உடனடியாக நீக்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.
மேலும் இதன் மூலம் உள்ளூர் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் இனிமேல் சிறப்புக்கட்டணம் செலுத்த வேண்டிய தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார். இதோடு ரயில்வேயின் இந்த முடிவு குறித்து அனைத்து கோட்ட தலைமையகங்களுக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் லட்சக்கணக்கான பயணிகள் பயனடைவார்கள் எனவும் வீரேந்திர குமார் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கிய கொரோனா தொற்றினால் ரயில், விமானம், போக்குவரத்து என அனைத்து சேவைகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பின்னர் தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் தான் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனைத்து சேவைகளும் மீண்டும் தொடங்கியது.
மேலும் படிக்க
கார்களின் பேட்டரியில் இயங்கும் ஆட்டோ ரிக்ஷாக்கள், சாத்தியமா?