கோடைகாலம் தொடங்கும் முன்னரே வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடந்த இரு நாட்களாக தமிழ்நாட்டில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மேலும் 5 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை தொடரும்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மேலும் 5 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணத்தினால் இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
மார்ச் 20 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 21 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 22 ஆம் தேதி கடலோர தமிழக மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 - 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 - 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் படிக்க
இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம்!
e-NAAM: மின்னணு முறையில் தேங்காய் கொள்முதல்: விவசாயிகள் மகிழ்ச்சி!