தென்மேற்கு பருவமழை விடை பெற்றதை தொடர்ந்து, வடகிழக்கு பருவமழை வரும் 17-ம் தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது வளிமண்டலத்தின் கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருவதால் காற்றானது கிழக்கு திசை நோக்கி வீச துவங்கி உள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் மழை பெய்ந்து இருப்பதாகவும் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
தென்மேற்கு பருவமழையானது இவ்வாண்டு எதிர்பார்த்ததை விட சற்று அதிகமாகவே பெய்துள்ளது. அதே போன்று இவ்வாண்டு பொழிய உள்ள வடகிழக்கு பருவமழையானது, அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்ய கூடும் எனவும், இயல்பை விட சற்று அதிகமாகவே பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை, வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களான ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் அளித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.
Anitha Jegadeesan
Krishi Jagran