தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக திகழ்ந்து, கம்பீரமாக காட்சியளிக்கிறது தஞ்சை பெரிய கோவிலில் என்று அழைக்கப்டும் பெருவுடையார் கோவில். இந்த கோவில் உலகம் போற்றும் கட்டடக்கலை அம்சத்தைக்கொண்டுள்ளது.
கி.பி. 10ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்று விளங்கிய முதலாம் இராஜராஜ சோழன் இக்கோவிலைக் கட்டுவித்தார். 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோவிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன. அதன்படி, 1012 ஆண்டுகளை கடந்தும் அதன் அழகும் கம்பீரமும் குறையாமல் காட்சியளிக்கிறது.
யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு, உலகப் புகழ்பெற்ற இந்த தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டும் தோறும் ராஜராஜ சோழன் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திரம் நவம்பர் 3ஆம் தேதி வருவதால் அவரது 1037ஆவது ஆண்டு சதய விழா அன்றைய தினம் நடைபெறவுள்ளது. கி.பி 985ம் ஆண்டு சதய நட்சத்திரத்தில் ராஜராஜ சோழனுக்கு முடி சூட்டப்பட்டதை நினைவு கூறும் விதமாகவும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவை முன்னிட்டு வருகிற 2ஆம் தேதி (புதன்கிழமை) பெரிய கோவில் வளாகத்தில் கவியரங்கம், கருத்தரங்கம், ஆன்மிக சொற்பொழிவு, பரிசளிப்பு விழா முதலியன நடைபெறுகிறது. 3 ஆம் தேதி காலை தேவார நூலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, ஓதுவார்களின் வீதியுலா நடக்கிறது.
அதனைத் தொடர்ந்து, பெரிய கோவிலுக்கு அருகே உள்ள ராஜராஜ சோழனின் சிலைக்கு கோவில் நிர்வாகம், மாவட்டம் நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. தொடர்ந்து பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகமும் நடைபெறுகிறது. இந்த விழாவானது இந்த ஆண்டு வழக்கம் போல 2 நாட்கள் நடைபெறவுள்ளது.
மேலும் படிக்க: