2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும் காலத்தை நீட்டித்துள்ள ரிசர்வ் வங்கி. இன்றுடன் முடிவதாக இருந்த நிலையில் அதனை மேலும் ஒரு வார காலத்திற்கு அதாவது அக்டோபர் 7 ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மூலம் மாற்றிக் கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனது அறிக்கையில் அக்டோபர் 8 ஆம் தேதிக்கு மேல், RBI வெளியிடும் 19 அலுவலகங்களில் மட்டும் ஒருநாளைக்கு அதிகப்பட்சம் ரூ.20,000 வரை ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.2000 நோட்டு முன்பு போலவே செல்லுபடியாகும் என சுற்றறிக்கையில் தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, குறிப்பிட்ட தேதி வரை பொதுமக்கள் இதனை பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படலாம் எனவும் தெளிவுப்படுத்தியுள்ளது. தற்போது வரை புழக்கத்திலிருந்த 96 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ள நிலையில், மீதமுள்ள நோட்டுகளையும் திரும்ப பெறும் வகையில் இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காலக்கெடு முடிந்தால் என்ன நடக்கும்?
கடந்த மே மாதம், 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக முடிவெடுத்த ரிசர்வ் வங்கி, செப்டம்பர் 30, 2023 அன்று பரிவர்த்தனை மற்றும் டெபாசிட் செய்வதற்கான கடைசி தேதியாக முன்னர் நிர்ணயித்தது. முன்னர் அறிவிப்பின் படி இன்றுடன் முடிவதாக இருந்த நிலையில் தற்போது அது அக்டோபர் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 7 ஆம் தேதிக்கு பிறகு இன்னும் ஒருவரிடம் 2000 ரூபாய் நோட்டு இருந்தால், அதை அவரால் வங்கியில் டெபாசிட் செய்ய இயலாது. ஆனால் அதே நேரத்தில் ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் இருந்து மாற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டு நவம்பர் 2016-இல் பயன்பாட்டுக்கு வந்தது. பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அவற்றுக்குப் பதிலாக புதிய முறையில் ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் வெளியிடப்பட்டன.
பொதுமக்கள் மத்தியில் 2000 ரூபாய் நோட்டுக்கு வரவேற்பு இல்லாத நிலையில், 2018-19 ஆம் ஆண்டிலேயே 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி நிறுத்தியது. அதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு புழக்கத்தில் இருக்கும் 2000 நோட்டுகளை திரும்பப்பெறுவதாக அறிவித்த து குறிப்பிடத்தக்கது.
96 சதவீதம் அச்சடிக்கப்பட்டுள்ள 2000 ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது வழங்கப்பட்டுள்ள காலக்கெடு மேலும் நீடிக்கப்பட வாய்ப்பு குறைவு என்பதை பொருளாதார நிபுணர்களின் கணிப்பாக உள்ளது. எனவே ரிசர்வ் வங்கி வழங்கியுள்ள இந்த வாய்பினை பயன்படுத்தி தங்களிடமுள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Read more:
தொடர்ந்து ஒரு வாரமாக விலை வீழ்ச்சி- தங்கத்தில் முதலீடு செய்தோர் கலக்கம்
இந்த 196 மாடல் தான்- பம்புசெட் மானியத்தில் கவனிக்க வேண்டியவை