வறுமையில் ஈகை என்பதை பாடத்தில் படித்த நமக்கு, இத்தகைய நிகழ்வுகள், தானம் செய்வதன் உன்னதத்தை உணர்த்துகிறது. தமிழக முதல்வரின் இலங்கை தமிழர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்குமாறு, வேலுார் மாவட்ட ஆட்சியரிடம், 10 ஆயிரம் ரூபாயை பிச்சைக்காரர் ஒருவர் வழங்கியுள்ளார். இந்த பத்தாயிரம் ரூபாயை சேகரிக்க அவர் எவ்வளவு கஷ்டங்களைக் கடந்து வந்திருப்பார் என்பதை மற்றவர்கள் நினைத்துப்பார்த்தால், அவருடைய ஈகை குணத்தை உணர முடியும்.
துாத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பூல்பாண்டி. 72 வயதான இவர் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துபவர்.இந்நிலையில், வேலுார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்துக்கு வந்தார்.
நிவாரணம்
பின், தான் பிச்சை எடுத்து சேர்த்திருந்த 10 ஆயிரம் ரூபாயை, இலங்கை தமிழர்களுக்கு உதவும் வகையில், முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்குமாறு, ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் வழங்கினார்.
ரூ.51 லட்சம்
அப்போது, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 2010ம் ஆண்டு முதல் பிச்சை எடுத்து வருகிறேன். அதில் கிடைக்கும் பணத்தில் பல பள்ளிகளுக்கு குடிநீர் வசதி, எழுது பொருட்கள், மேஜை போன்றவற்றை வாங்கித் தந்தேன்.
இது தவிர, கொரோனா நிவாரணம், வெள்ள நிவாரண நிதி என, 51 லட்சம் ரூபாய் வழங்கி இருக்கிறேன்.
ஈகை குணம்
தற்போது, இலங்கை தமிழர்களின் நலனுக்காக, ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று பிச்சை எடுத்த பணத்தை, அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் நிவாரண நிதியாக வழங்கி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார். வேலை செய்து சம்பாதிப்பவர்களே, தானம் செய்யத் தயங்கும் இந்த காலத்தில், இந்த மனிதரின் ஈகை குணம் பாராட்டுதலுக்கு உரியது.
மேலும் படிக்க...