கடலுார் மாவட்டத்தில் நிவர், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட 81 ஆயிரம் விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வங்கிக் கணக்கில் செலுத்தும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பர் 25ம் தேதி 'நிவர்' புயல் (Nivar Storm) காரணமாக மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 1ம் தேதி 'புரெவி' புயலால் (Burevi Storm) கனமழை கொட்டித் தீர்த்தது. புயல் காரணமாக பெய்த மழை மட்டுமின்றி, டிசம்பர் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை மீண்டும் கனமழை பெய்தது. இதனால், கடலுார் மாவட்டத்தில், 1.5 லட்சம் ஏக்கர் நெற்பயிர் (Paddy Crops) நீரில் மூழ்கின. தாழ்வான குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கின. பாதிக்கப்பட்ட பயிர்களை முதல்வர் பழனிசாமி (CM Palanisamy) பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். பயிர் பாதித்த விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரண உதவி வழங்கப்படும் என தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு நிவாரணம்:
மத்திய குழுவினர் டிசம்பர் 7ம் தேதி கடலுார் மாவட்டம் வருகை தந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டுச் சென்றனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பயிர்கள் கணக்கெடுக்கப்பட்டது. அதில் 81 ஆயிரம் விவசாயிகளின் நிலத்தில் 39 ஆயிரம் எக்டேர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. எக்டேர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரண உதவி (Relief fund) அறிவிக்கப்பட்டது. இறவை நெல் வயலாக இருந்தால் எக்டேர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாயும், மானாவாரியாக இருந்தால் 10 ஆயிரம் ரூபாயும் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 13ம் தேதி முதல் 'வெப் போர்ட்டல் பேமென்ட் (Web Portal Payment)' முறையில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. கடலுார், மதலப்பட்டு, நல்லாத்துார் உட்பட ஒரு சில பகுதிகளைத் தவிர மற்ற விவசாயிகளுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இன்சூரன்ஸ் (Insurance) மூலம் இழப்பீடு
வாழை, மரவள்ளி, காய்கறி பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை (Horticulture Department) மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டத்தில் இதுவரை 4.5 கோடி ரூபாய்க்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. தற்போது அறுவடை (Harvest) நேரத்தில் கனமழை பெய்ததால் கம்மாபுரம், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கணக்கெடுப்பு பணி நடத்தப்பட உள்ளது. மேலும் புயல், மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்கள் அறுவடையின் போது குறைவான மகசூல் (Low yield) கிடைத்தால் அவர்களுக்கும் இன்சூரன்ஸ் (Insurance) மூலம் இழப்பீடு தொகை வழங்கப்படும். அதற்காக அறுவடை நேரத்தில் எவ்வளவு மகசூல் கிடைக்கிறது என கணக்கிடும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த இன்சூரன்ஸ் தொகை அறுவடை முடிந்த பின்னர் வழங்கப்பட உள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
மழையில் மூழ்கிய பயிர்களுக்கு இழப்பீடு மற்றும் காப்பீடு! ஆட்சியர் உறுதி!
தமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் விளைபொருள் ஒப்பந்தச் சட்டத்தை எதிர்த்து மனு!