காட்டுப்பன்றியை வன விலங்குகள் பட்டியலில் இருந்து விலக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கடந்த 16 ஆம் தேதி நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, கூட்டுறவு இணைப்பதிவாளர் சந்திரசேகர் மற்றும் வேளாண்மை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர், விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளின் விவரம் பின்வருமாறு-
குமரி மாவட்டத்தில் கும்பப்பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் தற்போது அறுவடை நடைபெற்று வருவதால், மார்ச் மாதம் 30-ந் தேதி வரை பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். நெய்யூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள ரெயில்வே பாலத்தை ஆய்வு செய்து விவசாயிகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுபன்றியை விலக்குக:
தெங்கம்புதூர் கால்வாயில் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதை தடுக்கவும், அதேபோல் எட்டாவது மடை அருகே தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர். விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை காட்டுப்பன்றி மற்றும் குரங்குகள் பெருமளவில் சேதப்படுத்தி வருகின்றன. எனவே, காட்டுப்பன்றிக்கு வன விலங்குகள் பட்டியலில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
குமரி மாவட்டத்தில் உள்ள கால்வாய்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். கும்பப்பூ நெல் சாகுபடியின் போது நெல் விதையில் கலப்பினம் இருந்ததால் நெல் பயிர்களில் சில நாட்களுக்கு முன்பாக கதிர் வந்தது. இதனால் விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். குமரி மாவட்டத்தில் விவசாயம் முதன்மை தொழிலாக உள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் வேளாண்மை கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு ஏற்கனவே 105 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. தற்போது பாலமோர் எஸ்டேட்டில் 195 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு கல்லூரி அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் கேட்டறிந்த ஆட்சியர் ஸ்ரீதர், அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அதன் தீர்வுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார். வேளாண்மை கல்லூரி அமைப்பது தொடர்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் எனவும் கூட்டத்தில் விவசாயிகளிடம் தெரிவித்தார்.
மேலும் படிக்க :
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி எப்போது ? கைவிரித்த ஒன்றிய அரசு