குறுவை சாகுபடி பயிர்களுக்கு காப்பீடு செய்யாததால், விவசாயிகளுக்கு மத்திய - மாநில அரசுகள், தலா 10 சதவீதம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என, டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலர் ஆறுபாதி கல்யாணம் தெரிவித்துள்ளார்.
அறிக்கை
டெல்டா மாவட்டங்களில் ஏப்ரல் - மே மாதங்களில், நிலத்தடி நீர் பாசனம் (Ground water Irrigation) வாயிலாக குறுவை சாகுபடி செய்யப்பட்டது. மொத்த குறுவை சாகுபடி பரப்பில் இது, 80 சதவீதம். ஆற்று பாசனம் வாயிலாக, 20 சதவீதம் சாகுபடி நடந்தது. குறுவை நெல் அறுவடை ஜூலை முதல் முழுவீச்சில் நடந்து வருகிறது. இம்மாத இறுதியில் அறுவடை (Harvest) முடியும். எனவே, தமிழக அரசு அறிவித்துள்ள குறுவை கொள்முதல் விலையை, ஆகஸ்ட் முதல் முன் தேதியிட்டு வழங்க வேண்டும்.
மழையால் நெல் சேதமாகாமல் இருக்க, அனைத்து தாலுகாக்களிலும், 20 ஆயிரம் முதல், 30 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட, உலர் கலன்களுடன் கூடிய உலோக சேமிப்பு கலன்கள் அமைக்க வேண்டும்.
நடமாடும் கொள்முதல் நிலையங்களை அமைத்து, இடைத்தரகர்களை கட்டுப்படுத்த வேண்டும். கொள்முதல் செய்த நெல்லுக்கான பணத்தை, ஒரு வாரத்திற்கு இரண்டு முறை வங்கியில் செலுத்த வேண்டும்.
ஊக்கத் தொகை
நிலுவையில் உள்ள பயிர் காப்பீடு இழப்பீட்டை விரைந்து பெற்றுத் தர வேண்டும். நடப்பு குறுவை சாகுபடி பயிர்களுக்கு காப்பீடு செய்யவில்லை. எனவே, சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு மத்திய - மாநில அரசுகள், தலா 10 சதவீதம் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க
சிறை வளாகத்தில் இயற்கை விவசாயம்: உற்பத்தியும் அதிகரிப்பு!
இயற்கை விவசாயத்தில் மலேசியா வாழ் இந்திய வம்சாவளி இளைஞருக்கு விருது!