ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 18 மாதங்களுக்கான அகவிலை நிவாரண நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓய்வூதியதாரர்கள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது. இதனால் ஓய்வூதியதாரர்கள் மட்டுமல்லாமல் மத்திய அரசு ஊழியர்களுக்கும் விரைவில் நிலுவைத்தொகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா நெருக்கடி தொடங்கிய பின் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2021 ஜூன் மாதம் வரை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியையும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணத்தையும் மத்திய அரசு நிறுத்தி வைத்தது. 2021 ஜூலை முதல் மீண்டும் அகவிலைப்படி வழங்கப்பட்டது.
நிலுவைத் தொகை (Pension Balance)
2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரை 18 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். இந்த நிலுவைத்தொகை இன்னும் வழங்கப்படாமல் தொடர்ந்து நிலுவையிலேயே உள்ளது. இந்நிலையில், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 18 மாதங்களுக்கான அகவிலை நிவாரணத் தொகையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு பாரதிய ஓய்வூதியதாரர்கள் சங்கம் (Bharatiya Pensioners Manch) கடிதம் எழுதியுள்ளது.
பென்சன் மட்டுமே வருமானம் (Pension is the only income)
இந்தக் கடிதத்தில், அகவிலை நிவாரண நிலுவைத் தொகையை செலுத்தாமல் இருப்பதால் ஓய்வூதியதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவச் செலவுகளை சமாளிக்க ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவைத் தொகை பணம் தேவை எனவும், ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் மட்டுமே ஒரே வருமானம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவைத் தொகை குறித்து பிரதமர் நரேந்திர மோடி முடிவெடுத்தால், அதனால் மத்திய அரசு ஊழியர்களும் பயனடைவார்கள். ஏனெனில், ஓய்வூதியதாரர்களுக்கான 18 மாத நிலுவைத் தொகை மட்டுமல்லாமல், மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகையும் சேர்த்தே மொத்தமாக செலுத்தப்படும்.
மேலும் படிக்க
Post Office: மாதந்தோறும் வருமானம் கிடைக்க சிறப்பான அஞ்சலக திட்டம்!