வேலுாரில், பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தையடுத்து, இரவு நேரங்களில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வேலுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் பெண் டாக்டர் ஒருவர், கடந்த 17 ல் அதிகாலை 1:00 மணிக்கு, காட்பாடியில் இருந்து ஆட்டோவில் சென்ற போது ஐந்து பேர் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த வழக்கில் ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட ஐந்து பேரை வேலுார் வடக்கு போலீசார் கைது செய்தனர். இதையடுத்து ஆட்டோ டிரைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் வேலுாரில் இன்று (மார்ச் 24) நடந்தது.
புதிய கட்டுபாடுகள் (New Restrictions)
ஏ.டி.எஸ்.பி., சுந்தரமூர்த்தி பேசியதாவது: பெண் டாக்டர் பாலியல் விவகாரத்தையடுத்து ஆட்டோ டிரைவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. டிரைவரின் ஐ.டி., நம்பர், உரிமையாளர் பெயர், விலாசம், டிரைவர் மொபைல் எண், ஓட்டுனர் உரிமம், ஆர்.டி.ஓ., லைசன்ஸ் ஆகியவற்றை பயணிகள் பார்வைக்கு தெரியும்படி ஆட்டோவின் பின்புறம் போர்டு போட வேண்டும். இவை இல்லாத ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும். டிரைவர் லைசன்ஸ் ரத்து செய்யப்படும். இரவு நேரத்தில் ஆட்டோ ஓட்டுபவர் சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தகவல் தெரிவித்து அனுமதி பெற்ற பின்னர் தான் இயக்க வேண்டும்.
ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் கருத்து கேட்ட போது, இது போன்ற குற்றவாளிகளை சுட்டுத்தள்ளும்படி கூக்குறலிட்டனர்.
வேலுார் மாவட்ட எஸ்.பி., ராஜேஷ் கண்ணன் உத்தரவு: இரவு நேரத்தில் வரும் ஆட்டோ, வாகனம் மற்றும் பொது மக்கள் நடமாட்டத்தை போலீசார் கண்காணிக்க வேண்டும். மக்கள் கூடும் இடங்கள், சந்திப்புக்களில் போலீசார் நிறுத்தப்பட்டு வாகன சோதனையில் ஈடுபட வேண்டும். வாகன உரிமம் இல்லாத ஓட்டுனர்களை கைது செய்ய வேண்டும். காட்பாடி, சத்துவாச்சாரி பகுதிகளில் இரவு நேரத்தில் செல்லும் ஷேர் ஆட்டோக்களை கண்காணிக்க வேண்டும். வேலுார் மாவட்டத்தில் எத்தனை ஆட்டோக்கள் உள்ளன, எந்த பகுதியில் இயக்கப்படுகின்றது, குற்ற பின்னணி உள்ள டிரைவர்கள் குறித்த விவரங்களை மூன்று நாட்களில் போலீசார் சேகரிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.