ஏற்றுமதி அதிகரிப்பு, ஜி.எஸ்.டி., போன்ற பல காரணங்களால், தமிழகத்தில் அரிசி விலை உயர்ந்து வருகிறது. ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முழுமையாக அமலுக்கு வரும் போது, அரிசி விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில், தஞ்சை மாவட்டத்தில் இருந்து 60 சதவீதமும், ஈரோடு, கரூர், நாமக்கல் போன்ற பகுதியில் இருந்து 30 சதவீதம் நெல் உற்பத்தியாகிறது. மேலும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்கு வருகிறது. இரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக, கோதுமை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் இருந்து அரிசி ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மேலும், அரிசிக்கு ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட உள்ளதால், அரிசி விலை உயர துவங்கியுள்ளது.
அரிசி விலை (Rice Price)
ஒரு கிலோ 43 முதல் 47 ரூபாய் வரை விற்பனையான பழைய பொன்னி அரிசி, 3 ரூபாய் உயர்த்து 46 முதல் 50 ரூபாய்; புதிய பொன்னி அரிசி கிலோ 35 முதல் 39 ரூபாயிலிருந்து, 36 முதல் 40 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல் அரிசி வணிகர் சங்கங்களின் சம்மேளன செயலர் மோகன் கூறியதாவது: உக்ரைன், இரஷ்யா போர் காரணமாக கோதுமை ஏற்றுமதி தடைப்பட்டுள்ளது. பல ஐரோப்பிய நாடுகள் கோதுமையில் இருந்து, அரிசிக்கு உணவு முறையை மாற்றிக் கொண்டிருக்கின்றன. உலகம் முழுதும் அரிசிக்கான தேவை சிறிது அதிகரித்துள்ளது.
ஜி.எஸ்.டி., வரி (GST Tax)
இரண்டு மாதத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து, 2 கோடியே 20 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 15 லட்சம் டன் கையிருப்பு உள்ளதாலும், நெல் விளைச்சல் அதிரிக்கும் என்பதாலும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. வரும் 18 ஆம் தேதி முதல் பதிவு செய்யப்படாத பிராண்ட் அரிசிக்கு, 5 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படவுள்ளது. வியாபாரிகள் இருப்பு வைத்துள்ள அரிசிக்கு வரி செலுத்த வேண்டி இருக்கும்.
இதனால், தற்போது 3 ரூபாய் வரை அரிசி விலை உயர்த்துள்ளது. ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்தவுடன் அனைத்து ரக அரிசிகளும், 5 ரூபாய்க்கு மேல் விலை உயரும் அபாயம் உள்ளது. இந்த வரியை திரும்ப பெற, மத்திய, மாநில அரசுகள், ஜி.எஸ்.டி., கவுன்சிலை வலியுறுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க
விவசாயிகளே! தினசரி வருமானம் பெற இந்தப் பயிர்களை பயிரிடுங்கள்!
கோதுமை மாவு ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு!