இந்தியா முழுவதும் சுமார் 566 சுங்கச் சாவடிகள் செயல்பாட்டில் இருக்கும் நிலையில் தமிழகத்தில் மட்டும் 48 சுங்கச் சாவடிகள் இருக்கின்றன. இந்த சுங்கச் சாவடிகளில் சிலவற்றில் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுங்க கட்டணம் (TollGate fee)
பல முக்கிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளை நாம் பயன்படுத்துவதற்கு அரசுக்கு சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட காலத்தில் சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்படுவது வழக்கம். அந்த வகையில் சென்னையில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து மதுரை, கோவை, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளில் அமைந்திருக்கும் சுங்கச் சாவடிகளில் மார்ச் 31ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட இருக்கிறது. சென்னை புறநகரில் உள்ள 5 சுங்கச் சாவடிகளில் மட்டும் தற்போது கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விரைவில் மற்ற சுங்கச் சாவடிகளிலும் கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.
தற்போதைய அறிவிப்பின்படி, கார்களுக்கு 5 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதேபோல, டிரக்குகளுக்கு 10 சதவீதம் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் பராமரிப்புப் பணிகளுக்கான செலவுகள் அதிரித்துள்ளதால், அடுத்து வரும் நாட்களில் நெடுஞ்சாலைகளில் கட்டுமானப் பணிகளை மேம்படுத்தவும், மேலும் சில திட்டங்களுக்கு செலவிடவும் தற்போது கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
வருவாய் (Income)
தமிழ்நாட்டில் மொத்தம் 55 சுங்கச் சாவடிகள் இருக்கும் நிலையில், அதில் இப்போது 29 சுங்கச் சாவடிகளுக்கான கட்டணம் மட்டும் உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் சுங்கச் சாவடிகள் வாயிலான வருவாய் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இந்த சுங்கச் சாவடிகளில் ஆண்டுக்கு சராசரியாக ரூ.36 கோடி முதல் ரூ.96 கோடி வரை கட்டணம் வசூலாகிறது.
கட்டண வருவாயைப் பொறுத்தவரையில், பரனூர் சுங்கச் சாவடியில் அதிகபட்சமாக ரூ. 96 கோடி கிடைக்கிறது. அடுத்து ஆத்தூர் சுங்கச் சாவடியில் ரூ. 82 கோடியும், வானகரம் சுங்கச் சாவடியில் ரூ. 82 கோடியும், கப்பலூர் சுங்கச் சாவடியில் ரூ.53 கோடியும், பூதக்குடி சுங்கச் சாவடியில் ரூ.50 கோடியும், சிட்டம்பட்டி சுங்கச் சாவடியில் ரூ. 49 கோடியும், எட்டூர்வட்டம் சுங்கச் சாவடியில் ரூ.36 கோடியும் வசூலாகிறது.
மேலும் படிக்க
ரேஷன் கடைகளில் இலவச கேழ்வரகு: மத்திய அரசிடம் உதவி கேட்கும் தமிழக அரசு!