
ஓணம் பண்டிகையால் கேரளளாவில் கொரோனாத் தொற்று கேரளாவில் அதிகரித்தது போல் தமிழகத்தில் அதிகரிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மருத்துவத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மருந்து சேமிப்பு கிடங்கை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
தீவிரக் கண்காணிப்பு (Intensive monitoring)
பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, கேரளாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூடுதல் தடுப்பூசி (Additional vaccine)
மேலும் இந்த மாத தொகுப்பிற்கு தற்போது வரை 63 லட்சத்து 76 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில் கூடுதலாக மத்திய அரசு 5 லட்சத்து 89 ஆயிரம் தடுப்பூசிகளை அளித்துள்ளன. மீதமுள்ள 16 லட்சத்து 75 ஆயிரம் தடுப்பூசிகளையும் விரைவில் வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதேபோல் அடுத்த மாதத்திற்கு மத்திய அரசு 1.04 கோடி தடுப்பூசி வழங்க உள்ளது. தற்போது 14 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இந்த தடுப்பூசிகள் 3 நாட்களுக்கு பயன்படுத்தப்படும்.
கேரள மாநிலத்தில் பண்டிகையால் கொரோனா தொற்று அதிகரித்தது போன்று, தமிழகத்தில் அதிகரிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அடுத்த 10 நாட்களுக்கு தொற்று பரவல் அபாயம் உள்ளதால், மிகவும் கூர்ந்து கவனமாக செயல்பட வேண்டும்.
100 சதவீதம் தடுப்பூசி (100 percent vaccinated)
மேலும் எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் நாள்தோறும் பக்கத்து மாநிலங்களுக்குச் சென்று வருபவர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
3-வது அலை (3rd wave)
3-வது அலை வந்தாலும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தயாராக உள்ளது. மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றையும் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி: 48 கோடி டோஸ் செலுத்தி இந்தியா புதிய சாதனை!
தடுப்பூசியை கலந்து போடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு!