தமிழக முதலமைச்சராக நாளைப் பதவிஏற்கும், மு.க.ஸ்டாலின், கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்திற்கு முதல் கையெழுத்திடுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
புதிய அரசு (The new government)
234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டப்பேரவைக்குக் கடந்த மாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், 133 இடங்களில் அமோக வெற்றி பெற்ற திமுக, தனிப் பெரும்பாண்மையுடன் ஆட்சி அமைக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 30க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் நாளை பதவி ஏற்கின்றனர்.
ஆளுநர் மாளிகையில் நடைபெறும் எளிமையான நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவி ஏற்கிறார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவித்து இருந்தார்.
திமுக வாக்குறுதி (DMK promise)
இதற்காக 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அறிவித்து இருந்தார். அதில் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் திட்டம் முக்கியமான திட்டமாகும். ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டத்தை கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி முதல் செயல்படுத்த இருப்பதாகவும் அறிவித்து இருந்தார்.
ரூ.4000 நிவாரண நிதி (Rs.4000 relief fund)
முதலமைச்சராகப் பதவி ஏற்றதும் கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துவார். அதன் பிறகு கோட்டைக்கு செல்கிறார். அங்கு முதல்-அமைச்சர் இருக்கையில் அமர்ந்ததும் 3 முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.அதில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு முதல் கையெழுத்திடுவார் என்று தெரிகிறது.
ஜூனில் தொடக்கம் (Starting in June)
இந்த திட்டம் ஜூன் 3-ந்தேதி தொடங்குவதாக இருந்தாலும் அதற்கு சில நடைமுறைகள் உள்ளதால் இப்போதே கையெழுத்திட்டால்தான் செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியும் என்பதால் அதில் கையெழுத்திடுவார் என தெரிகிறது.
பெண்களுக்கு இலவசம் (Free for women)
தமிழகம் முழுவதும் நகரப் பேருந்துகளில் (Town Bus) பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்திற்காக் கோப்பில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திடுவார் எனவும் தெரிகிறது.
தாலிக்குத் தங்கம் திட்டம் (Gold for Thaali)
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தின்கீழ் பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவித்தொகையாகத் தற்போது வழங்கப்படும் ரூ.25 ஆயிரத்தை ரூ.30 ஆயிரமாக உயர்த்துவதுடன் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்துக்கும் அவர் கையெழுத்திடுவார் என தெரிகிறது.
இதுத் தவிர பல்வேறு முக்கிய அறிவிப்புகளிலும் அவர் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க...
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி! 5 முனை போட்டியில் வென்று, 6 வது முறைய திமுக ஆட்சி!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் சரிந்த சினிமா நட்சத்திரங்கள்!
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, முழு ஊரடங்கை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் பரிந்துரை!