டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால் மத்திய அரசு ரூ.814 கோடி இழப்பை சந்தித்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தானின் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர்ந்து 130 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக மத்திய அரசு நடத்திய பேச்சுவார்தைகளுக்கு தோல்வியில் முடிந்த நிலையில், தங்களின் போராட்டம் மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதிவரை தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளின் போராட்டம் குறித்து மக்களவையில் மத்திய அமைச்சர் கட்கரி பேசினார், அப்போது டெல்லியில் துவங்கிய விவசாயிகள் போராட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடிகள் திறந்துவிடப்பட்டன. இதனால், அரசிற்கு கடந்த மார்ச் 16 வரையிலும் ரூ.814 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மட்டும் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக பஞ்சாபில் ரூ.487 கோடி, ஹரியானாவில் ரூ.326 கோடியும், ராஜஸ்தானில் ரூ.1.04 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மற்ற மாநிலங்களில் இதுபோல் எந்தவித இழப்பும் சுங்கச்சாவடிகளில் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.