குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியிடப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு, தமிழக அரசின் பட்ஜெட்டில் இடம்பெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
வாக்குறுதி
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வழங்கிய 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு விட்டதாக தி.மு.க-வினர் கூறிவருகிறார்கள். ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட சில முக்கியமான வாக்குறுதிகளை தி.மு.க அரசு இன்னும் நிறைவேற்றவில்லை.
விமர்சனம்
எனவே இதனைக் காரணம் காட்டி, தி.மு.க அரசுக்கு எதிரான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட தரப்பினர் முன்வைத்து வருகிறார்கள். குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் என்கிற தி.மு.க-வின் வாக்குறுதி சட்டமன்றத் தேர்தலின்போது பெண் வாக்காளர்களைப் பெரிதாகக் கவர்ந்தது.
கேள்வி
தி.மு.க வெற்றி பெற்றவுடன், ரூ.1,000 உரிமைத்தொகையை தமிழக அரசு வழங்கும் என்று குடும்பத் தலைவிகள் எதிர்பார்த்தனர். ஆனால், இதுவரை அது வழங்கப்படவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் இந்த விவகாரத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் பிரசாரத்தின்போது, குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவது பற்றி பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
ஸ்டாலின் பிரச்சாரம்
ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆக இருந்த திருமகன் ஈவெரா திடீர் மறைவைத் தொடர்ந்து அங்கு நடைபெறும் இடைத்தேர்தலை முன்னிட்டு, பிரச்சாரம் செய்த முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து ஈரோட்டில்,சம்பத்நகர், கருங்கல்பாளையம் காந்திசிலை, பி.பி.அக்ரஹாரம் ஆகிய இடங்களில் திறந்த வேனில் நின்றபடி மக்கள் மத்தியில் கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
மேலும் படிக்க...