மின் கட்டணம் என்பது அண்மைகாலமாக கணிசமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதில், முதல் 100 யூனிட்டுகள் இலவசம் என்பது மட்டுமே சற்று ஆறுதல் தருகிறது.
இந்நிலையில், கூலித் தொழிலாளி ஒருவருக்கு ரூ.95 ஆயிரம் ரூபாய் மின்கட்டணம் வந்திருப்பது அவரை மட்டுமல்லாமல், அந்த பகுதி மக்கள் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
கூலித்தொழிலாளி
ஈரோடு மாவட்டம் மல்குத்திபுரம் தொட்டியை சேர்ந்தவர் ரேவண்ணா. 40 வயதான இவர் கூலிவேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டுக்கு 40 முதல் 50 யூனிட் வரையே மின்சாரம் பயன்படுத்தி வந்தார். ஒவ்வொரு வீட்டுக்கும் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் என்பதால் கடந்த சில ஆண்டுகளாக ரேவண்ணாவின் வீட்டுக்கு மின் கட்டணம் அதிகம் செலுத்தியதில்லை.
ரூ.95,000
இந்நிலையில் அவரது செல்போனுக்கு 94 ஆயிரத்து 985 ரூபாய் மின் கட்டணம் கட்ட வேண்டும் என குறுஞ்செய்தி வந்தது. இதை பார்த்த ரேவண்ணா அதிர்ச்சியாகியுள்ளார். பின்னர், அவர் தாளவாடி மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்டார். அதற்கு அவர்கள், 'மின்கட்டணம் கணக்கீடு செய்யும்போது குளறுபடி ஏற்பட்டிருக்கும். அதை சரிசெய்து தருகிறோம்' என தெரிவித்துள்ளனர்.இதையடுத்து அவர் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.
எது எப்படியோ அதிகாரிகள் கணக்கில் செய்யும் குளறுபடிகள், இவரைப் போன்ற பாமரமக்களை மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாக்குவது உண்மைதான். இதனைத் தடுக்க அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் படிக்க...