2022-2023 ஆம் ஆண்டில் கூட்டுறவுத்துறை மூலம் பயிர்க்கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டிற்கு மேல் கடன் வழங்கி சாதனை படைத்துள்ளதாகவும் இதனால் 1,24,850 விவசாயிகள் பயனடைந்துள்ளனர் எனவும் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தகவல் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் 2022-2023-ஆம் ஆண்டில் கூட்டுறவுத்துறை மூலம் 1,00,655 விவசாயிகளுக்கு பயிர் கடனாக ரூ.783.45 கோடியும், 24,195 விவசாயிகளுக்கு கால்நடை பராமரிப்புக் கடனாக ரூ.98.74 கோடியும் ஆக மொத்தம் 1,24,850 விவசாயிகளுக்கு ரூ.882.19 கோடி வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம் தெரிவித்துள்ளதாவது:
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 205 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 5 பெரும் பல நோக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன்கள் மற்றும் கால்நடை பராமரிப்புக் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் பயிர் கடன்கள் வழங்கப்படுகின்றன. கடன் பெற்ற தேதியில் இருந்து ஓராண்டு காலத்திற்குள் கடனை முழுவதும் திருப்பி செலுத்துவோருக்கு 7 சதவீத வட்டியினை அரசே ஏற்று கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கி வருகிறது. இதனால் விவசாயிகள் தங்களின் தேவைக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். புதிய உறுப்பினர்களை அதிகளவில் சேர்த்து, அவர்களுக்கு கடன் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர்க்கடன் வழங்க 2022-2023-ஆம் ஆண்டுக்கு அரசு நிர்ணயித்த ஆண்டுக் குறியீடு ரூ.660 கோடியையும் தாண்டி 1,00,655 விவசாயிகளுக்கு ரூ.783.45 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி 114% எய்தி சாதனை படைத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கூட்டுறவு சங்கங்களில் 25,837 விவசாயிகள் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு இவர்களுக்கு ரூ.148.54 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் வளர்ப்பு உள்ளிட்ட கால்நடைகள் வளர்க்க கே.சி.சி. திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு 2021-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 2022-2023-ஆம் ஆண்டில் 24,195 விவசாயிகளுக்கு ரூ.98.74 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
NHFDC திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்த வட்டியில் கூட்டுறவு சங்கங்களின் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. 2022-2023-ஆம் ஆண்டில் 1,486 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.7.19 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் பெற்ற கடனை உரிய காலத்தில் திருப்பி செலுத்துவோருக்கு வட்டியினை அரசே ஏற்று கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கி வருகிறது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிக அளவில் கடன் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி 2021 திட்டத்தின் கீழ் 5,241 மகளிர் சுய உதவிக்குழுக்கள் (51,023 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள்) கூட்டுறவு நிறுவனங்களில் பெற்ற ரூ.134.40 கோடி கடனை தமிழ்நாடு அரசு சமீபத்தில் தள்ளுபடி செய்திருந்தது.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் 2022-2023-ஆம் ஆண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 3,696 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு (47,808 மகளிர் குழு உறுப்பினர்கள்) ரூ.153.81 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அரசு நிர்ணயித்த இலக்கு ரூ.137.93 கோடியைத் தாண்டி கடன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
தமிழ் உட்பட 13 மொழிகளில் இனி தேர்வு.. க்ரீன் சிக்னல் காட்டிய உள்துறை