காட்டுப் பன்றிகள் தொல்லையால், உடுமலை பகுதியில் சேலையால் வேலி கட்டி நெல் வயலை விவசாயிகள் இரவும் பகலுமாக பாதுகாத்து வருகின்றனர். காற்றில் படபடக்கும் சேலையால் எழும் சத்தத்தில் பன்றிகள் தொல்லை குறைந்துள்ளதாகவும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், அமராவதி நேரடி பாசன பகுதியான கல்லாபுரம், ராமகுளம் வட்டாரத்தில் சுமார் 3000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. சுமார் 2800 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். மீதமுள்ள இடங்களில் கரும்பு, தென்னை, மக்காச்சோளம் சாகுபடி செய்து வருகின்றனர்.
பன்றிகள் தொல்லை
ஏற்கெனவே பல்வேறு நோய் தாக்குதலால் பயிர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், காட்டுப்பன்றிகளும் வயலுக்குள் புகுந்து நெற்பயிர்களை அழித்து நாசம் செய்து வருகின்றன. இதனால் உடுமலை பகுதி விவசாயிகள் மிகுந்த மனவேதனையில் உள்ளனர். தற்போது, நெல் வயல்களில் நெற்கதிர்கள் பால் பிடித்து விளையும் தருவாயில் இருக்கின்றன. இந்நிலையில், காட்டுப்பன்றிகளை தடுக்க பல்வேறு வழிமுறைகளை கையில் எடுத்து வருகிறார்கள்.
சேலையில் வேலி கட்டிய வயல்வெளி
ஆண்டுதோறும் இதுபோன்ற பிரச்சனைகளை உடுமலை விவசாயிகள் எதிர்கொண்டு வருகின்றனர். தற்போது, நெற்பயிரை காக்க நெல் வயலை சுற்றிலும் வண்ண வண்ண சேலைகளால் வேலி கட்டி உள்ளனர். காற்றில் சேலைகள் படபடக்கும்போது பயந்து காட்டுப்பன்றிகள் வயல்களுக்குள் வருவதில்லை என்றும் இதனால் பயிர்கள் பாதுகாக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இரவும் பகலும் பாதுகாப்பு
பன்றிகளை விரட்ட இரவு பகல் பாராமல் வயல்வெளிகளில் தங்கியிருந்து பயிர்களை காத்து வருவதாக கூறும் விவசாயிகள், சில நேரங்களில் காட்டுப்பன்றிகள் ஆட்களையே தாக்குவதாகவும் பயத்துடன் தெரிவிக்கின்றனர். பன்றிகள் தொல்லையை தடுக்க அதிகாரிகள் முறையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க...
"Delhi Chalo" மேலும் 2 லட்சம் விவசாயிகள் படையெடுப்பு! தீவிரமடையும் போராட்டம்!
அடுத்த புயல் புரெவி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, டிசம்பர் 1 முதல் கனமழைக்கு வாயப்பு!!
விவசாயிகளே வந்துருச்சா..? இந்த ஆண்டின் கடைசி ரூ.2000/- தொகுப்பு!