சேமிப்புக்கணக்கில் மினிமம் பேலன்ஸ் (Minimum balance) எனப்படும் குறைந்தபட்ச இருப்புத்தொகையை வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்டுவந்த அபராதம் ரத்து செய்யப்படுவதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது.
44 கோடி சேமிப்புக் கணக்கு ( Saving Account)
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ, நாடு முழுவதும் 21,959 கிளைகளைக் கொண்டுள்ளது. 31 லட்சம் கோடி ரூபாயை வாடிக்கையாளர்கள் இந்த வங்கியில் டெபாசிட் செய்துள்ளனர். இந்த வங்கியில் 44 கோடி சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
எஸ்பிஐ-யில் கணக்கு வைத்திருப்போர் இதுவரை, தங்களது கணக்கில் குறிப்பிட்ட தொகையை அதாவது மினிமம் பேலன்ஸை வைப்பு வைக்க வேண்டும். மெட்ரோ நகரங்கள், நகர்ப்புறங்கள், புறநகர் மற்றும் கிராமப்புறங்களில், தனித்தனியே இந்தக் கட்டாய மினிமம் பேலன்ஸ் தொகை மாறுபடும். குறிப்பிட்ட தொகை இல்லாத கணக்குகளுக்கு அபராதக் கட்டணத் தொகையும் வசூலிக்கப்பட்டு வந்தது.
மினிமம் பேலன்ஸ் (Minimum balance)
மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்போர் குறைந்தபட்சம் 3,000 ரூபாயை தங்களது எஸ்பிஐ கணக்கில் மினிமம் பேலன்ஸ் ஆக வைத்திருக்க வேண்டும். புறநகர்ப் பகுதிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு 2,000 ரூபாய் மினிமம் பேலன்ஸ் ஆக இருக்க வேண்டும்.
கிராமப்புறங்களில் உள்ளோர் 1,000 ரூபாய் வைத்திருக்க வேண்டியதும் கட்டாயமாக இருந்தது.
அபராதக் கட்டணம் (Penality)
அவ்வாறு மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்போர் மினிமம் பேலன்ஸ் வைக்கத் தவறினால் அதிகப்பட்சமாக 15 ரூபாய்+ ஜிஎஸ்டியும், புறநகர்ப்புறங்களில் உள்ளோர் தவறினால் அதிகப்பட்சமாக 12 ரூபாய் +ஜிஎஸ்டியும், கிராமப்புறங்களில் உள்ளோருக்கு அதிகப்பட்சமாக 10 ரூபாய் + ஜிஎஸ்டியும் அபராதக் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இவ்வாறு மாதந்தோறும் விதிக்கப்படும் அபராதத்தொகையால் வங்கி மீது வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.
டிஜிட்டல் பரிவர்த்தனையை ஒருபக்கம் அரசு ஊக்குவித்து வரும் நிலையில், இப்படி குறைந்தபட்ச தொகை இல்லையென்றால் அபராதம் விதிப்பது, வாடிக்கையாளர்களின் சேமிப்பு பழக்கத்தை குறைக்கும் என்றும் கூறப்பட்டது.
அபராதம் இல்லை (No penality)
இந்த நிலையில், சேமிப்பு கணக்குகளுக்கு மினிமம் பேலன்ஸை வைத்திருக்காவிடில் அபராதம் விதிக்கப்படாது என்று வங்கி தற்போது அறிவித்துள்ளது. மேலும், எஸ்.எம்.எஸ் சேவைக்கான கட்டணத்தையும் எஸ்பிஐ ரத்து செய்துள்ளது. இந்த அறிவிப்பு எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க...
விளைபொருள் சேமிப்பு கிடங்கு அமைக்க விருப்பமா? கடன் வழங்குகிறது இந்தியன் வங்கி!