கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையில் சிக்கியதால், 3,500 ஹெக்டேர் பரப்பில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமாகியுள்ளன. அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பேரிழப்பை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.
நெல் சாகுபடி (Paddy cultivation)
நடப்பாண்டு பருவமழை கைகொடுத்ததால், இந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள 6,500 ஹெக்டேர் பரப்பிலும் முழுமையாக நெல் சாகுபடி செய்யப்பட்டது. நடவு செய்து 4 மாதங்களில் அறுவடையான நிலையில், அம்பை-16 ரக நெற்பயிர்கள் செழித்து வளர்ந்தன. கடந்த மாதம் இறுதியில் அறுவடையும் தொடங்கியது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இந்த மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் நெல் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். ஏற்கெனவே, 500 ஹெக்டேர் வயல்களில் முதல்கட்ட அறுவடை முடிந்த நிலையில் 6 ஆயிரம் ஹெக்டேர் விளைந்த வயல்கள் அறுவடை செய்யும் தருவாயில் இருந்தது.
நெற்பயிர்கள் சேதம் (Paddy Damage)
இதற்காக டெல்டா மாவட்டங்கள் மற்றும் மதுரை, சேலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட நெல்அறுவடை இயந்திரங்கள், குமரியில் முகாமிட்டு அறுவடைப் பணியை தொடர்ந்தன. இந்நிலையில், கனமழையால் நாகர்கோவில், புத்தேரி, இறச்சகுளம், பூதப்பாண்டி, மணவாளக்குறிச்சி பெரியகுளம், நெல்லிகுளம் உட்பட 3,500 ஹெக்டேர் வயல்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. விளைந்த நெற்பயிர்கள் மழையில் சாய்ந்து மீண்டும் முளைத்துள்ளன.
குறிப்பாக பெரியகுளம் ஏலா, புத்தேரி, இறச்சகுளம் ஏலாக்களில் அறுவடையை பாதியில் கைவிட்டு இயந்திரங்கள் ஓரமாக நிறுத்தப்பட்டுள்ளன.இதனால் அறுவடை செய்த நெல்லை சாக்கு மூட்டைகளில் கட்டி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்து வரு கின்றனர்.
மேலும் படிக்க...
பட்டுப் புழு வளர்ப்பை அதிகரிக்க மத்திய அரசின் திட்டம் - தேனி விவசாயிகளுக்கு வாய்ப்பு!
விவசாயத்திற்கு மின் இணைப்பு பெறுவது இனி ரொம்ப ஈஸி- விபரம் உள்ளே!