
கள்ளக்குறிச்சி மாவட்ட தொழில்நெறி மற்றும் வழிகாட்டுதல் மையத்தல் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து கலெக்டர் ஸ்ரீதர் செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி துவங்கும் காலாண்டிற்கு, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
உதவித்தொகை (Scholarship)
பத்தாம் வகுப்பு தோல்வி அல்லது வெற்றி பெற்றவர்கள், மற்றும் அதற்கு மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் பதிவு செய்து புதுப்பித்து கடந்த மார்ச் 31ம் தேதி 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் ஜூன் 30ம் தேதி 45 வயதிற்குள்ளும், இதர இனத்தைச் சேர்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
மாதமொன்றுக்கு பத்தாம் வகுப்பு தோல்வியடைந்தவர்களுக்கு 200 ரூபாய், தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300, மேல்நிலைக்கல்வி தேர்ச்சிக்கு 400, பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு 600 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது.