புதிய பாலைவன வெட்டுக்கிளிகள் அடுத்த 4 வாரங்களில் இந்தியாவில் ஊடுருவ உள்ளதாக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (Food and Agriculture Organization) தெரிவித்துள்ளது.
பயிர்களை நாசம் செய்த வெட்டுக்கிளிகள் (Locusts that ruins crops)
ஈரான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த பாலைவன வெட்டுக்கிளிகள் முதற்கட்டமாக ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்திர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் விளைநிலங்களை நாசம் செய்தன. இதில் ராஜஸ்தான் மாநிலத்தில் தான் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டது.
இவற்றைக் கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகளும், மத்திய அரசும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது.
2-வது கட்டமாக தலைநகர் டெல்லிக்கு அருகே உள்ள குரு கிராமில் பாலைவன வெட்டுக்கிளிகள் கூட்டம் முகாமிட்டன. இதையடுத்து குரு கிராம் மாவட்ட நிர்வாகம் டிராக்டர் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க நடவடிக்கை மேற்கொண்டது. அதற்கு எதிர்பார்த்த பலன் கிடைக்காத பட்சத்தில், மத்திய அரசு சார்பில் ஹெலிகாப்டர் உதவியுடன் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
மீண்டும் வெட்டுக்கிளி ஆபத்து
இந்நிலையில், புதிய பாலைவன வெட்டுக்கிளிகள் அடுத்த 4 வாரங்களில் இந்தியாவில் ஊடுருவ உள்ளதாக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (Food and Agriculture Organization) (FAO) தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்
இவை இரண்டாம் தலைமறை பாலைவன வெட்டுக்கிளிகள் (Second generation Locusts). தற்போது வடமேற்கு கென்யா, கிழக்கு எத்தியோப்பியா மற்றும் சோமாலியாவின் சில பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளன. இவற்றில் பெரும்பாலான வெட்டுக்கிளிகள் வட மேற்கு கென்யாவில் முகாமிட்டுள்ளன. அவை பெரும்பாலும் தெற்கு சூடானுக்கு இடம்பெயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
செங்கடல் பகுதியில் அண்மையில் பெய் மழை காரணமாக, வெட்டுக்கிளிகள் கூட்டம், ஏமன் மற்றும் சவூதி அரேபியாவின் கடற்கரை பகுதிக்கு சென்றுவிட்டன. அதேநேரத்தில் மழைக்கு முன்பாக இந்தோ-பாகிஸ்தான் எல்லைப்பகுதியை வெட்டுக்கிளிகள் கூட்டம் அடைந்ததாகவும், அவற்றில் சில வெட்டுக்கிளிகள் நேபாளம் சென்றடைந்ததாகவும் தெரிகிறது.
எனவே இந்தோ- பாகிஸ்தான் எல்லையை அடைந்துள்ள வெட்டுக்கிளிகள், ராஜஸ்தானில் பெய்யும் மழையைப் பயன்படுத்திக்கொண்டு, அங்கு ஊடுருவக் காத்திருக்கின்றன.
மீண்டும் ஊடுருவும் பாலைவன வெட்டுக்கிளிகள் (Desert locusts may Re-invade)
அவ்வாறு ஊடுருவும், இந்த வெட்டுக்கிளிகள், ஏற்கனவே இந்தியாவில் முகாமிட்டுள்ள, ஈரான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வந்த பாலைவன வெட்டுக்கிளிகளுடன் இணைய நேரிடும். எனவே இந்தியா மட்டுமல்லாது, சூடான், எத்தியோப்பியா, சோமாலியா, பாகிஸ்தான் ஆகிய நாடகளும், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க....
கேன்சர் கில்லர் என்று சொல்லப்படும் முள் சீத்தா பழம்! அதன் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு!
நல்ல செய்தி..!! PM Kisan திட்டத்தில் இப்போது அதிக விவசாயிகள் பயன் பெறலாம்!