மரக்கன்றுகளை பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் அரசிடமிருந்து நேரடியாக பெறும் வகையில், பசுமைத்தமிழகம் இணையதளத்தில் புதிய பகுதியாக SEED CALCULATOR என்கிற பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை, 2020-2030 – இடைப்பட்ட காலத்தை சுற்றுச்சூழல் மறுசீரமைப்பின் பத்தாண்டுகளாக அறிவித்துள்ளது. காலநிலை மாற்றத்தால் நிகழும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் பல்லூயிர் வளத்தில் கவனம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உலகில் பல்லூயிர் வனத்தில் 60-70 சதவீதம் கூட்டாகக் கொண்டிருக்கும் பன்னிரண்டு நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். தமிழ்நாடு 1,30,060 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.இது நாட்டின் மொத்த பரப்பளவில் 4% சதவீதம் ஆகும். தமிழகத்தில் தற்போது 23.7 சதவீதம் அளவில் காடுகள் மற்றும் மரங்களின் பரப்பளவு உள்ளன. இதனை அதிகரிக்கும் வகையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் “ பசுமை தமிழகம் “ என்கிற திட்டத்தை கடந்தாண்டு தொடங்கி வைத்தார் .இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், தமிழ்நாட்டில் காடுகளின் பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்பதாகும்.இதனடிப்படையில்,தமிழகம் முழுவதும் தனியாருக்கு சொந்தமான காலி நிலங்கள், பள்ளி, அரசு அலுவலகப் பகுதிகளில் மரங்கள் நடப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு வனத்துறை மட்டுமன்றி,பிற அரசுத்துறைகள், தன்னார்வ அமைப்புகளும் இப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பசுமைத் தமிழகம் என்ற இணைய பக்கமும் இத்திட்டத்திற்காக உருவாக்கப்பட்டு, அதன் மூலம் மரக்கன்றுகள் வளர்ப்பு தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் தான் பசுமைத் தமிழகம் இணைய பக்கத்தில்” SEED CALCULATOR” என்கிற பகுதி இணைக்கப்பட்டுள்ளது.
தற்போது பொதுமக்கள், தன்னார்வலர்கள் தங்கள் பகுதியில் மரக்கன்றுகள் வாங்க நர்சரி மையங்களுக்கு செல்கின்றனர்.இதனிடையே, வனத்துறையின் பண்ணைகளிலிருந்தும் தரமான மரங்கன்றுகளை வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. ”SEED CALCULATOR” என்கிற பகுதியில் 101 வகையான மரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.இவற்றின் சிறப்பம்சம் நீங்கள் தேர்வு செய்யும் மரத்தின் தொடர்பான அனைத்து விதமான தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு நீங்கள் கொய்யா என்று தேர்வு செய்தால், அதனின் அறிவியல் பெயர், பூ, காய் உருவாகும் மாதங்கள் உட்பட, எவ்வளவு விதைகள் தேவைப்படும் போன்ற தகவல்களுடன் விளக்கப்படுகிறது.
முன்னதாக தமிழ்நாடு அரசு JICA நிதியுதவியுடன் தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்டத்தை 1997-98 முதல் 2012-12 வரை பங்கேற்பு முறையில் ( கூட்டு வன மேலாண்மை ) செயல்படுத்தியது.திட்டத்தின் இரண்டு கட்டங்களின் கீழ் 6.6 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் அழிக்கப்பட்ட காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பசுமை தமிழகம் திட்டத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்றிட தீவிர முனைப்பில் தமிழ்நாடு அரசு இயங்கி வருகிறது.
மேலும் படிக்க :
தோல் அம்மை நோயினால் கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு எவ்வளவு?
தமிழக வேளாண் பட்ஜெட் 2023 - கருத்து கேட்பு குறித்து அமைச்சர் அறிக்கை