கிராமங்களில் மின்அழுத்தம், மின் இழப்பு ஏற்படுவதை தடுக்க, வீடுகள் மற்றும் விவசாயத்திற்கு தனித்தனி வழித்தடங்களில் மின் விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த, தமிழக மின் வாரியம் முடிவு செய்துள்ளது. கிராமங்களில் வீடுகள், கடைகள், விவசாயம் என, அனைத்து பிரிவுகளுக்கும், ஒரே மின் வழித்தடங்களில் மின் வினியோகம் செய்யப்படுகிறது. மின் இழப்புவிவசாயத்திற்கு காலை, மாலையில் தலா, ஆறு மணி நேரம் மட்டும் மின்சாரம் வழங்கப்படும் நிலையில், மற்ற பிரிவுகளுக்கு, 24 மணி நேரமும் வழங்கப்படுகிறது. விவசாயத்திற்கு மின்சாரம் வழங்கப்படாத நேரத்திலும், சிலர் பயன்படுத்துகின்றனர்.
மின் விநியோகம் (Power distribution)
அந்த நேரத்தில் வீடுகளில் மின்னழுத்தம் ஏற்படுவதுடன், மின் இழப்பும் ஏற்படுகிறது. தற்போது, தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக மின் இழப்பு, 13 சதவீதம் என்றளவில் உள்ளது. அதில், 1 சதவீத இழப்பை குறைத்தாலே ஆண்டுக்கு, 800 கோடி ரூபாய்க்கு வருவாய் இழப்பு தடுக்கப்படும். மத்திய அரசு, நாடு முழுதும் ஒரு இடத்தில் இருந்து, மற்றொரு இடத்திற்கு மின்சாரத்தை எடுத்து செல்லும்போது ஏற்படும் மின் இழப்பை பூஜ்ஜியமாக குறைக்க, மறுசீரமைக்கப்பட்ட மின் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.
அத்திட்டத்தின் கீழ், தமிழக மின் வாரியம், மின் இழப்பை தடுக்க, கூடுதல் மின் வழித்தடங்கள் அமைக்க உள்ளது. மேலும், துணை மின் நிலையங்களில் இருந்து, வீடுகள் மற்றும் விவசாயத்திற்கு தனித்தனி மின் வழித்தடங்களில் மின்சாரம் விநியோகிக்க முடிவு செய்துள்ளது. அந்த வழித்தடங்களில் மீட்டர்களும் பொருத்தப்படும். இதன் வாயிலாக, எந்த வழித்தடத்தில் எவ்வளவு மின்சாரம் செல்கிறது;
மின்னழுத்தம் எங்கு ஏற்படுகிறது என்பதை துல்லியமாக அறிய முடியும். பிரச்னைக்கு உரிய இடங்களில், கூடுதல் டிரான்ஸ்பார்மர் நிறுவுவது, மின் வழித்தடம் அமைப்பது என, மின் கட்டமைப்பை வலுப்படுத்துவதால், மின்னழுத்தம், மின் இழப்பு தடுக்கப்படும்.மொத்தம், 1,686 மின் வழித்தடங்களில், விவசாய மின் இணைப்புகள் உள்ளன.
475 வழித்தடங்கள் (475 Routes)
அதில் முதல் கட்டமாக, 475 வழித்தடங்களில் விவசாயத்திற்கு மட்டும், மின்சாரம் விநியோகிக்கும் பணிகளை, மின் வாரியம் துவக்க உள்ளது. திட்ட செலவு, 1,523 கோடி ரூபாய். இந்த பணிகளை, விரைவில் மின் வாரியம் துவக்க உள்ளது.
மேலும் படிக்க
வறட்சியை தாங்கும் சுரைக்காய்: ஓராண்டில் நல்ல மகசூல்!
நீங்கள் வாங்கும் கருப்பட்டி ஒரிஜினலா போலியா? கண்டறிவது எப்படி?