உலக அளவில் வேளாண்மையில் பெரும் தாக்கத்தையும், பேரழிவையும் ஏற்படுத்தும் இடம்பெயர் பூச்சிகளாக உள்ள இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் இந்தியாவில் நுழைந்து உள்ளது. இவை விவசாய பயிர்களை அழித்து உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்தக்கூடியவை எனபதால் இதன் தாக்குதலில் இருந்து பயிர்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்கம் குறித்து வேளாண் அமைப்பைச் சேர்ந்த அதிகாரி கீத் கிரெஸ்மன் முன்பே கூறியிருந்தார். வட இந்தியாவில் கடந்த 27 ஆண்டுகளில் மிக மோசமான அளவிற்கு, பயிர் தாக்கி பாலைவன வெட்டுக்கிளிகள் நாசம் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பீதி ஒரு புறம் இருக்க இந்த வெட்டுக்கிளிகளின் தாக்குதலால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.
வெட்டுக்கிளிகளின் இனப்பெருக்கம்
ஆப்பிரிக்காவில் இனப்பெருக்கம் செய்யும் இந்த வகை பூச்சிகள், ஏமன், ஈரான், சோமாலியா, பாகிஸ்தான் வழியாக இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளன. வரும் வழியெல்லாம் இனப்பெருக்கம் செய்து அப்பகுதியில் உள்ள பயிர்களை இந்த வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வருகின்றன. சாதாரண வெட்டுக்கிளிகளைப் போல் இல்லாமல் இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் ஒரு சதுர கிலோமீட்டரில் கோடிக்கணக்கில் இனப்பெருக்கம் செய்யும். இதன் ஆயுட்காலம் 6 மாதங்கள்.
பாலைவன வெட்டுக்கிளிகள் (Locust)
பாலைவன வெட்டுக்கிளிகள் சாதாரண அதிக தூரத்திற்கு புலம்பெயர்ந்து செல்லும் ஆற்றல் கொண்டது. இவை ஒரு நாளில் 150 கீ.மீ தூரம் வரை பறக்கும். இருப்பதிலேயே மோசமான வெட்டுக்கிளி என்றால் அவை இந்த பாலைவன வெட்டுக்கிளிகள்தான். ஒரு பெரிய பூச்சி அதன் எடைக்கேற்ப உணவைத் தினமும் உண்ணும். ஒரு சிறிய சதுர கி.மீட்டாரில் 80 மில்லியன் பெரிய பூச்சிகள் இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
27 ஆண்டுகளில் இல்லாத பயிர் சேதம்
தற்போது இந்தியாவிற்குள் படையெடுக்கும் இந்த வெட்டுக்கிளிகள் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குச் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்மாதம் தொடக்கத்தில் ராஜஸ்தானின் பல பகுதிகளில் பயிர்களை நாசம் செய்த வெட்டுக்கிளிகள் குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களின் பயிர்களை நாசம் செய்து வருகின்றது. இந்த பூச்சிகளின் தாக்குதலால் சுமார் 5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான பயிர்கள் நாசமாகி உள்ளது. மேற்கு மற்றும் கிழக்கு ராஜஸ்தானில் தான் அதிகம் பாதிப்பு காணப்படுகிறது. தற்போது பஞ்சாப் மாநிலத்தின் எட்டு மாவட்டங்களில் வெட்டுக்கிளிகள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒழிப்பு நடவடிக்கை
இந்த வெட்டுக்கிளிகளின் தாக்குதலை கட்டுப்படுத்த மத்திய வேளாண் துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பயிர் பாதிப்பு ஏற்படும் பகுதிகளின் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த ரசாயன மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது. வெட்டுக்கிளிகளை விரட்டுவதற்காக, பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள், பகலில் எஃகு பாத்திரங்களை அடிப்பது, பலத்த சப்தத்தை உண்டாக்குவது, இரவு நேரத்தில் டிராக்டரை வயல்களுக்குள் இயக்குவது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் சேதங்கள் தொடர் கதையாக உள்ளது.
தமிழகத்திற்குப் பாதிப்பு இல்லை
வட இந்தியாவில் பயிர்களை முற்றிலும் நாசம் செய்து வரும் வெட்டுக்கிளிகள் தமிழகத்திற்கு வராது என்று வேளாண் துறை செயலாளர் சுகன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இதனால் தமிழக விவசாயிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். இருப்பினும் விவசாயிகள் மற்றும் அரசு வேளாண்முறை போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்என வேளாண் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Daisy Rose Mary
Krishi Jagran