நாட்டின் முதல் இயற்கை விவசாய மாநிலமாக சிக்கிம் உருவாகியுள்ளது. இயற்கை விவசாயத்தில் முன்னோடி உலகின் முதல் மாநிலமாக திகழும் சிக்கிமுக்கு ஐ.நா. விருது அறிவித்து கவுரவித்துள்ளது. இந்தியாவிலேயே முற்றிலும் இயற்கை வேளாண்மைக்கு மாறிய பெருமையைப் பெற்றிருக்கிறது சிக்கிம்.
சிக்கிம் மாநிலத்தின் பெரும்பாலான நிலங்களில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் நிலையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சிக்கிம் மாநிலம் எட்டியது. எனவே சிக்கிம் மாநிலத்தை இயற்கை விவசாய மாநிலமாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கடந்த 2003-ல் முன்பு அம்மாநில முதல்வர் பவன் குமார் சாம்லிங் தலைமையிலான அரசு, சிக்கிம் மாநிலத்தை முற்றிலுமாக இயற்கை விவசாயத்துக்கு மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தது. அதையடுத்து, விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லி மருந்து, உரம் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. ரசாயனப் பொருள்கள் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. பிறகு, விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளத் தொடங்கினர். இதன் பயனாக இன்று சிக்கிம் இயற்கை விவசாய மாநிலமாக உருவெடுத்துள்ளது.
இங்கு, 76,393 ஹெக்டேர் பரப்பளவில் இயற்கை விவசாயம் நடந்து வருகிறது. மிளகு, ஏலக்காய், இஞ்சி, மஞ்சள், கோதுமை, பழ வகைகள் அங்கு பயிரிடப்பட்டு வருகின்றன. இதனால் சிக்கிம் முழுமையான இயற்கை விவசாயம் செய்யும் மாநிலமாக உருவெடுத்துள்ளது. மக்கள் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறிகளை அதிகஅளவில் இயற்கை முறையில் பயிரிட்டு வருகின்றனர். இதன் பயனாக கடந்த நிதியாண்டில் 80,000 மெட்ரிக் டன்கள் அளவிற்கு இயற்கையான முறையில் காய்கறிகள் அம்மாநிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்து வரும் சிக்கிம் மாநிலம், வெளி மாநிலங்களுக்கும் இயற்கை காய்கறிகளை விற்பனை செய்யும் அளவிற்கு முந்தைய இலக்கை கடந்து சாதனை படைத்து வருகிறது. நிலத்தின் பெரும்பகுதி தானியங்களும், ஒரளவு காய்கறிகளும் சாகுபடி செய்யப்படுகின்றன. கூடுதல் காய்கறி சாகுபடி செய்ய போதுமான நிலம் இல்லாததால், வீட்டுத் தோட்டங்களில் காய்கறி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
வீடுகளில் காய்கறி சாகுபடி செய்ய தேவையான இடுபொருட்கள் வீட்டுதோட்டங்களுக்கும் வழங்கப்படுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள 14 கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட விளை பொருட்களை வெளி மாநிலங்களுக்கும் விற்பனை செய்யும் அளவிற்கு சிக்கிம் வளர்ந்துள்ளது.
சிக்கிம் மாநிலத்தின் இந்த சாதனையை பாராட்டி ஐ.நா. விருது அறிவித்துள்ளது. மிகச்சிறந்த கொள்கைளை அமல்படுத்தியதற்காக ஐ.நா கவுன்சில் இந்த விருதை அறிவித்துள்ளது. ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பு வழங்கும் ‘பியூச்சர் பாலிஸி – 2018’ விருது நிலைக்கத்தக்க வளர்ச்சியை எட்டியதற்காகவும், நீண்டகால திட்டமிடலுடன் செயல்படுத்தியதற்காகவும் வழங்கப்படுகிறது. சிக்கிம் அரசின் முயற்சியால் 66 ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளதுடன், சுற்றுலாவும் விரிவடைந்துள்ளது.
மாநிலம் முழுவதும் இயற்கை விவசாயத்தை அறிமுகப்படுத்தி மக்களின் உடல் நலனில் அக்கறை கொண்டதற்காகவும் இதன் மூலம் சுற்றுலா பயணிகளை பெருமளவு ஈர்த்ததற்காகவும் இந்த விருது வழங்கப் படுகிறது. இந்த விருதுக்கு 51 நாடுகள் போட்டியிட்டன. மற்ற நாடுகளை முந்தி உலகின் முதல் இயற்கை விவசாய மாநிலமான சிக்கிம் இந்த விருதை தட்டிச் சென்றுள்ளது.