பருத்திக்கு விதிக்கப்படும் 11% இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என SIMA தலைவர் ரவி சாம் ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
SIMA- தென்னிந்திய பஞ்சாலைகள் அசோசியேஷனின் தலைவர் ரவி சாம் கூறுகையில், நடப்பு பருவத்தில் பருத்தி வரத்து மார்ச் 31 ஆம் தேதி வரை 60%- க்கும் குறைவாக இருந்துள்ளது. பல ஆண்டுகளாக இதே காலக்கட்டத்தில் வழக்கமான வரத்து 85% முதல் 90% ஆக இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பருத்திக்கு விதிக்கப்படும் 11% இறக்குமதி வரியிலிருந்து இந்த ஆண்டு அக்டோபர் வரை விலக்கு அளிக்க வேண்டும் என SIMA தரப்பில் ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பருத்தியினை இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளில் பணவீக்கம், தேவை குறைவு போன்ற காரணங்களால் பருத்தி ஜவுளிகளுக்கான தேவை ஏப்ரல் 2022 முதல் குறைந்தது. பருத்தி ஜவுளிகளின் உலகளாவிய ஏற்றுமதி 2021 மற்றும் 2020 இல் முறையே $154 பில்லியன் மற்றும் $170 பில்லியனாக இருந்த நிலையில் 2022 காலண்டர் ஆண்டில் $143.87 பில்லியனாக குறைந்துள்ளது.
SIMA- வின் தலைவர் ரவி சாம் மேலும் கூறுகையில், "மழைக்காலத்தில் பருத்தியை ஜின் செய்வது கடினமாக இருக்கும். புதிய பருத்தி வரும் வரை, பருவத்தின் இறுதி மற்றும் துவக்கத்தில், பருத்திக்கு சந்தையில் தட்டுப்பாடு ஏற்படும். எனவே ELS பருத்திக்கு 11% இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிப்பது நல்லது. மேலும் ஜூன் முதல் அக்டோபர் வரையிலான பிற பருத்தி வகைகளுக்கும் 2022 ஆம் ஆண்டு வரி விலக்கு அளிக்கப்பட்டதை போன்று விலக்கு அளிக்கவும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் பருத்தி விலை குவிண்டால் ஒன்றுக்கு (100 கிலோ) ரூ.9,000 ஆக இருந்தது. மேலும், தினசரி வருகை விகிதமானது 1.32 முதல் 2.2 லட்சம் பேல்களாக இருந்தது. அதிகப்பட்சமாக 2022 ஆம் ஆண்டு ஒரு குவிண்டால் ரூ.11,000 வரையிலும் விற்பனை போனது. ஆனால் தற்போதைய பருத்தி பருவத்தில் தினசரி வருகை விகிதமானது 1 முதல் 1.3 லட்சம் பேல்களாக மட்டுமே இருந்தது எனவும் ரவி சாம் தெரிவித்துள்ளார்.
பருத்தி விலையில் நிலவி வரும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக ஜவுளித்துறையும் சரியாக செயல்பட முடிவதில்லை. இந்தியாவின் பருத்தி நூல் ஏற்றுமதி 2022 ஏப்ரல் முதல் ஜன.,2023 காலகட்டத்தில் 48.5 கோடி கிலோவாக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் ஏற்றுமதியானது 118.5 கோடி கிலோவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
இரும்பு பெண்மணி திட்டம்- ஜூன் முதல் பள்ளி மாணவிகளுக்கும் கிட் வழங்கல்