காடம்புலியூரில் 2.16 கோடி மதிப்பீட்டில் முந்திரி பதப்படுத்தும் குறுந்தொழில் குழுமத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். மேலும், ரூ 153.22 கோடி மதிப்பீட்டில் மூன்று தொழிற்பேட்டைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இன்று சென்னை வர்த்தக மையத்தில் பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் விழா அரசு விழாவாக நடைப்பெற்றது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பல புதிய திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
முதல் குறுந்தொழில் குழுமம்:
குறுந்தொழில் குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் முதல் குறுந்தொழில் குழுமமாக கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், காடம்புலியூரில் ரூ.2 கோடியே 16 இலட்சம் திட்ட மதிப்பீட்டில், அதில் ரூ.1.81 கோடி தமிழ்நாடு அரசு மானியத்துடன் அமைக்கப்பட்டுள்ள முந்திரி பதப்படுத்தும் குறுந்தொழில் குழுமத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் பரவலாக குறுந்தொழில் நிறுவனங்கள் கொண்ட பல்வேறு குறுங்குழுமங்கள் (Micro Cluster) உள்ளன. ஊரகப்பகுதிகளில் நீடித்த நிலையான வேலைவாய்ப்பினை உறுதி செய்திடவும், பாலினம் மற்றும் சமூக சமநிலையை உறுதிபடுத்திடவும் இந்த குறுங்குழுமங்களை மேம்படுத்துவது இன்றியமையாதது ஆகும்.
இக்குறு நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக "குறுந்தொழில் குழும மேம்பாட்டுத் திட்டம்" என்ற புதிய திட்டத்தை கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு, இதுவரை 28 குறுங்குழுமங்கள் ரூ.117.33 கோடி தமிழ்நாடு அரசு மானியத்துடன் ரூ.143.47 கோடி திட்டமதிப்பீட்டில் அமைத்திட ஒப்புதல் அளிக்கப்பட்டு பல்வேறு நிலைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வேளாண்சார் தொழில் நிறுவன விருது:
மேலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் விருதுகளும் வழங்கப்பட்டன. மாநில அளவில் சிறந்த வேளாண்சார் தொழில் நிறுவனத்திற்கான விருதினை மாம்பழ கூழ் தயாரிக்கும் கிருஷ்ணகிரி- பவித்ரன் அசப்டிக் ப்ரூட் புராடக்ட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
மூன்று தொழிற்பேட்டைகள்:
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தேவையை கருத்தில் கொண்டு, செங்கல்பட்டு மாவட்டம்- கொடூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் ஆகிய இடங்களில் 262.03 ஏக்கர் பரப்பளவில் ரூ. 153.22 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ள மூன்று தொழிற்பேட்டைகளை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். இதன்மூலம் சுமார் 21,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு அமைச்சர்கள் த.மோ.அன்பரசன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, கருணாநிதி, எஸ்.எஸ்.பாலாஜி, வரலட்சுமி மதுசூதனன் போன்ற எம்.எல்.ஏக்களும், அரசுத்துறை உயர் அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.
மேலும் காண்க:
2022-23 ஆம் ஆண்டில் தோட்டக்கலை சாகுபடி ரிப்போர்ட்- ஒன்றிய அரசு வெளியீடு