News

Monday, 08 June 2020 06:12 AM , by: Daisy Rose Mary

Image credit by: Daily thanthi

தென்மேற்கு பருவமழை (Monsoon 2020) மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது, இதனிடையே குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக அணைகள் வேகமாக நிரம்பத் துவங்கியுள்ளன.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்து சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நாகர்கோவில், மார்த்தாண்டம், கருங்கல், மணவாளக்குறிச்சி, தக்கலை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

திற்பரப்பில் வெள்ளப்பெருக்கு

திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார்-1 மற்றும் சிற்றார்-2 அணைகளின் நீர் மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது

சிற்றாறு அணைகள் நிரம்பி வருவதையடுத்து குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
குழித்துறை ஆற்றில் உள்ள சப்பாத்து பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அந்த வழியாக யாரும் செல்லக்கூடாது என்பதற்காக இருபுறமும் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

பயிர்கள் சேதம்

பழையாற்று கால்வாயில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக தண்ணீர் கரையோரம் உள்ள வயல்கள் மற்றும் தோப்புகளுக்குள்ளும் புகுந்துள்ளது. இதனால் ஒழுகினசேரி பகுதி வயல்வெளிக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இந்த வயலில் தற்போது நாற்று நடப்பட்டுள்ள நிலையில் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் நாசமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கன மழைக்கு வாய்ப்பு

இதனிடையே தென்மேற்கு பருவமழை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சேலம், நாமக்கல், தர்மபுரி, மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், தேனி. திண்டுக்கல், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கன மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 - 50 கிலோமீட்டர் வேகத்திலும், லட்சத்தீவு, மாலத்தீவு கேரளா கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40- 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் மீனவர்கள் யாரும் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
மத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் மத்திய மற்றும் தென் வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 - 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், இதனால் வருகிற 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் மீனவர்கள் யாரும் இப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க...
சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு!
பாசனத்திற்காக பாவனிசாகர், அழியாறு அணைகள் திறப்பு!
வெட்டுக்கிளியைத் தொடர்ந்து... படைப்புழுக்களின் தொல்லை..!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)