அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில் நேற்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. மழை காரணமாக வெப்பம் தணிந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தைக் கடந்த சில நாட்களாகப் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்த அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம், நேற்றுடன் முடிவடைந்தது. அக்னி நட்சத்திரத்தின் இறுதி நாளான நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்தது.
கொட்டித்தீர்த்த கனமழை!
நெல்லை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. இதேபோல், தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.
மதுரை கோரிப்பாளையம், தல்லாகுளம், சிம்மக்கல்புதூர், தெப்பக்குளம் பகுதிகளிலும் சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
புதுக்கோட்டை, திருமயம், கந்தர்வ கோட்டை, கோமாபுரம், வளவம்பட்டி,ஆதனக்கோட்டை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.
இவ்வாறு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்ததால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!
இந்நிலையில், தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு உள் தமிழகம், மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், மற்றும் தென் தமிழகத்தின், புதுவை, காரைக்கால், பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,
நீலகிரி. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, மாவட்டங்களில் ஒரு இரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளிலும், வடக்கு வங்கக்கடல் பகுதியிலும் அடுத்த 48 மணி நேரத்திற்குச் சூறாவளிக் காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் இதனால் இங்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் வரும் 31ம் தேதி முதல் ஜூன் 4ம் தேதி வரை மீனவர்கள் அரபிக்கடலின் ஆழ்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூன் 1-ந் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை (South west monsoon)
கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1-
ந் தேதியே தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகி உள்ளதாக இந்திய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலின் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு - மத்திய அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மே 31 முதல் ஜூன் 4 வரை ஏற்படலாம். இதன் காரணமாக கேரளாவில் தென்மேற்கு பருவமழையானது ஜூன் 1 முதல் தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலைகள் உருவாகி உள்ளதாக இந்திய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது .
மேலும், கேரளத்தைத் தொடர்ந்து மாலதீவுகள், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளிலும் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான சாதகமான சூழல்கள் தென்படுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.