தமிழக மற்றும் புதுவை மாநிலங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.அந்தமான் நிகோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழையானது, கடந்த வார இறுதியில் தொடங்கியது. அதன் எதிரொலியாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டலத்தில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி போன்ற காரணங்களினால், பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பொலிவுக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தின் உள் மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு, சேலம், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எனவும், அப்போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை
சென்னையை பொறுத்தவரை மேகமூட்டத்துடன் காணப்படும். இருப்பினும் மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. வெப்ப நிலையானது 29 டிகிரி செல்சியஸ் இருந்து 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.ஓரிரு இடங்களில் அனல் காற்று வீச வாய்ப்புள்ளாதாக கூற பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இன்று முதல் மூன்று தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கேரளத்தில் தென்மேற்கு பருவ மழை
ஜூன் 6 ல் இருந்து கேரளத்தில் தென்மேற்கு பருவ மழைப் பெய்யத் துவங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கியது. அங்கு பருவ மழை பெய்யும் சமயத்தில் எல்லை ஓரத்தில் உள்ள தமிழக மாவட்டங்களும் மழை பெற வாய்ப்புள்ளது.
மழை நீர் சேகரிப்பு
நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. நீர்த்தேக்கங்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளன.பெரும்பாலான இடங்களில் வறட்சி நிலவுகிறது. இது போன்று மழை காலங்களில் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை முறையாக்கினால் மட்டுமே வருங்காலத்தில் இது போன்ற வறட்சியில் இருந்து மக்கள் மீள இயலும் என்று தமிழ்நாடு வெதர்மென் ப்ரதீப் ஜான் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
Anitha Jegadeesan