பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம், பயணியரின் வசதிக்காக பல திட்டங்களை செயல்படுத்துகிறது. தற்போது, மாற்றுத் திறனாளிகளுக்கு, சிறப்பு பஸ் சேவையை ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்த உள்ளது. மக்களுக்கு தரமான போக்குவரத்து சேவை வழங்குவதில், பி.எம்.டி.சி., முதலிடத்தில் உள்ளது. ஏழைகளின் உயிர் நாடியாக விளங்குகிறது. தங்களின் போக்குவரத்துக்கு, ஏழை பயணியர் பி.எம்.டி.சி.,யை நம்பியுள்ளனர். இதை உணர்ந்தே, நஷ்டத்தில் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல், பயணியருக்கு தரமான சேவை வழங்குகிறது.
சிறப்பு பேருந்து வசதி (Special Bus Service)
தற்போது ஒரு படி முன்னே சென்றுள்ள பி.எம்.டி.சி., மாற்றுத் திறனாளிகளுக்கு, சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்துள்ளது. இந்த பஸ்களில் சக்கர நாற்காலி வசதி இருக்கும்.இது தொடர்பாக, பி.எம்.டி.சி.,யின் ஐ.டி., பிரிவு இயக்குனர் சூர்யா சேன் கூறியதாவது: பெங்களூரில் மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக, 'வீல் சேர் லிப்டிங்' வசதி கொண்டுள்ள 100 பஸ்கள் வாங்க முடிவு செய்துள்ளோம். ஆகஸ்ட் 1-க்குள், இந்த பேருந்துகள் சேவையை துவங்கும். முதல்வர் பசவராஜ் பொம்மை, இந்த பஸ் போக்குவரத்தை துவங்கி வைப்பார்
இதுவரை தனியார் பஸ்களில் மட்டுமே, வீல் சேர் லிப்டிங் வசதி இருந்தது. இனி பி.எம்.டி.சி., பஸ்களிலும், இந்த வசதி இருக்கும். முதல் கட்டமாக இதுபோன்ற வசதியுள்ள, 100 பஸ்கள் வாங்கப்படும். வீல் சேரை மேலே துாக்கும் வசதி, பஸ்சின் மத்திய பகுதியில் செய்யப்பட்டுள்ளது. நிர்ணயித்த பட்டனை அழுத்தினால், பயணியர் உள்ளே வந்து அமர, வெளியே இறங்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளை மனதில் கொண்டே, இந்த பஸ்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மெஜஸ்ட்டிக்கில் இருந்து, ஹெப்பால், சில்க் போர்டு சாலை, வெளி வட்ட சாலை உட்பட, பி.எம்.டி.சி., நிர்வாகம் சுட்டிக்காண்பித்த வழித்தடங்களில், இந்த பஸ்கள் இயங்கும். ஏற்கனவே அத்திப்பள்ளி, எலஹங்கா, பிடதி என பல வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
மாற்றுத்திறனாளிகள் (Disabled persons)
மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: மாற்றுத் திறனாளிகளுக்கு, சிறப்பு பஸ் வசதி செய்து கொடுக்கும்படி, பல ஆண்டுகளாக வேண்டுகோள் விடுத்து வந்தோம். இப்போது எங்கள் வேண்டுகோள் நிறைவேறுகிறது. இதற்காக, பி.எம்.டி.சி., புதிதாக பஸ்கள் வாங்குவது வரவேற்கத்தக்கது. அது மட்டுமின்றி, பி.எம்.டி.சி., நிர்வாகம், மாற்றுத் திறனாளி குழந்தைகளிடம், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து, தன் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மூத்த குடிமக்கள், குழந்தைகள், பெண்களின் நலனை கருதி, பி.எம்.டி.சி.,யில் மேலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க