அமைச்சர் செந்தில்பாலாஜி ஆட்கொணர்வு மனு வழக்கினை விசாரித்த இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியதை அடுத்து, இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட உள்ளது. அமலாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதம் எனும் தீர்ப்பை ஒரு நீதிபதி வழங்கியுள்ளது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசின் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில்பாலாஜியினை அமலாக்கத்துறையினர் கைது செய்த சம்பவத்தால் தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜியினை, அமலாக்கத்துறையினர் சட்ட விரோத காவலில் வைத்ததாக அவரது மனைவி மேகலா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. செந்தில்பாலாஜி தரப்பில் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அமலாக்கத்துறை சார்பில் ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதங்களை முன்வைத்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு அமர்வு நீதிபதிகள் முன்னிலையில் நடைப்பெற்ற வழக்கின் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் செந்தில் பாலாஜியை விடுவிக்க வேண்டும் என்று ஒரு நீதிபதியும், நீதிமன்ற காவல் சட்டவிரோதமில்லை என மற்றொரு நீதிபதியும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளதால் அரசியல் களம் மீண்டும் சூடுப்பிடிக்கத் தொடங்கியுள்ளது.
செந்தில்பாலாஜி கைது தொடர்பான ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், நீதிமன்ற காவல் சட்ட விரோதமில்லை எனவும் நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பளித்துள்ளார். அதே நேரத்தில் மற்றொரு நீதிபதியான நிஷா பானு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சட்ட விரோதம் என தீர்ப்பளித்துள்ளார். மாறுப்பட்ட தீர்ப்பால் இவ்வழக்கு மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இறுதி தீர்ப்பு கிடைக்காத நிலையில் செந்தில் பாலாஜியின் தற்போதைய நிலையை தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூலை 12 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அமலாக்கத்துறையின் கைது சம்பவத்தின் போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் சென்னையிலுள்ள ஒமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பதாக ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரிய வந்த நிலையில், அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்தார்கள்.
இதனையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து காவேரி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில்பாலாஜிக்கு அங்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடைப்பெற்று தற்போது தொடர் சிகிச்சையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு மத்தியில் அவர் வகித்த துறைகள் மற்ற அமைச்சர்களுக்கு மாற்றப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்கிறார். தற்போது மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு பிறகு வழங்கப்படும் தீர்ப்பின் அடிப்படையில் தான் இந்த வழக்கின் போக்கு என்னவாகும் என்பது தெரிய வரும்.
மேலும் காண்க:
நிலத்தை உழவு செய்யும் விநோதமான டிராக்டர்- டீசல், மின்சாரம் எதுவும் வேண்டாம்!