பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் 2023-2024 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் தமிழக பட்ஜெட்டினை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கிய சில நிமிடங்களில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். நிதியமைச்சரின் பட்ஜெட் உரையினை தவிர்த்து மற்றவை அவை குறிப்பில் இடம்பெறாது என தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மூன்றாவது முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரைவையில் மிக முக்கியப் பதவியாக கருதப்படும் நிதித்துறையின் அமைச்சராக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பொறுப்பேற்ற நிலையில் 3-வது ஆண்டாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து வருகிறார்.
தனது உரையில் சமூகநீதி, அனைவருக்குமான வளர்ச்சி உள்ளிட்ட 4 முக்கிய அம்சங்கள் அடிப்படையில் திராவிட மாடல் நடைபெறுகிறது. திமுக ஆட்சி பதவியேற்றபோது வருவாய் பற்றாக்குறை ரூ.62,000 கோடியாக இருந்த நிலையில் நடப்பாண்டில் வருவாய் பற்றாக்குறையானது ரூ.30,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது என தமிழக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டு வரும் தகவல்களின் விவரம் பின்வருமாறு-
சென்னை சங்கமம் கலைவிழா மேலும் 8 முக்கிய நகரங்களில் விரிவு செய்யப்படும். நாட்டுப்புற கலைகளை பாதுகாக்க, கலைஞர்களை பாதுகாக்க ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும். மேலும் 591 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு கட்டணமில்லா பேருந்து அட்டை வழங்கப்படும். மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசனுக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும்.
மேலும் படிக்க: #Tnbudget2023: மாற்றுத் திறனாளிக்களுக்கான ஓய்வூதியம் ரூ.1500 ஆக உயர்வு உட்பட மற்ற தமிழக பட்ஜெட் விவரங்கள் உள்ளே
சென்னை கிண்டியில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை நடப்பாண்டில் திறக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழருக்கு வீடு கட்ட மேலும் ரூ.273 கோடி நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். ரூ.5 கோடி மானியத்துடன் அம்பேத்கர் நூல்கள் தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். அதனைப்போல் சர்வதேச தரத்திலான உலகளாவிய விளையாட்டு மையம் CMDA மூலம் சென்னையில் அமைக்கப்படும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்தது முதலே வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த முறையினை போன்றே இந்த முறையும், வேளாண் பட்ஜெட்டினை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்ச்செல்வம் நாளை (21 ஆம் தேதி) தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: #TNbudget2023: என்ன பங்காளி உங்க ஊர்லயும் மெட்ரோவா? பட்ஜெட்டில் மதுரை, கோவை மக்களுக்கு நற்செய்தி
இதனைத் தொடர்ந்து வரும் 23,24,26,27 ஆம் தேதி என 4 நாட்களுக்கு பட்ஜெட் மீதான சட்டப்பேரவை உறுப்பினர்களின் விவாதம் நடைப்பெற உள்ளது. பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பின் நிதி அமைச்சர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
விமர்சனங்களை பெற்ற அங்கக வேளாண்மை கொள்கை- விளக்கம் அளித்த வேளாண் அமைச்சர்