
இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்டு, அந்நாட்டு சிறையில் உள்ள 3 தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நடுக்கடலில் மீன்பிடித்த ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரையும், ஒரு படகையும் இலங்கை கடற்படை வீரர்கள் சிறைபிடித்து சென்றனர். இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று (மார்ச் 19) ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.
கச்சத்தீவு திருவிழாவையொட்டி 5 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த கென்னடியின் விசைப்படகை இலங்கை கடற்படையினர் மடக்கிப் பிடித்தனர். அந்தப் படகில் இருந்த மீனவர்கள் சங்கர் (53), அர்ச்சுனன் (35), முருகேசன் (49), ஆகியோரை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். அவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீன்வளத்துறையினர் வழக்கு பதிந்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இதனை கண்டித்து நேற்று ராமேஸ்வரத்தில் மீனவர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள், படகை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி இன்று (மார்ச் 19) வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
மேலும் இலங்கையில் மீனவர்களின் தொடர் போராட்டத்தால் அந்நாட்டு கடற்படையினர் எல்லை தாண்டி வருவதாக தமிழக மீனவர்களை கைது செய்கின்றனர். எனவே நம் மீனவர்கள் இலங்கை பகுதிக்குள் செல்லாமல் நம் எல்லைக்குள் மீன்பிடித்து விட்டு கரை திரும்ப வேண்டும் எனவும் தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளனர். இதற்கிடையே, ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "2025 ஆம் ஆண்டின் 3 மாதங்களுக்குள் இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் 10வது சம்பவத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறேன். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 17.03.2025 அன்று மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை, அவர்களது மீன்பிடி விசைப்படகுடன் 18.03.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.
பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க வலுவான தூதரக முயற்சிகள் தேவை என்று பலமுறை தான் வலியுறுத்திக் கேட்டுக் கொண்ட போதிலும், இதுபோன்ற கவலையளிக்கக்கூடிய சம்பவங்களின் எண்ணிக்கை தொய்வின்றி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித் தொழிலையே பெரிதும் நம்பியுள்ளனர்.
இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி இதுபோன்று சிறைபிடிக்கப்படுவதால், அவர்களது குடும்பத்தினர் வறுமையின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, தமிழ்நாட்டு மீனவர்கள் மேலும் கைது செய்யப்படாமல் தடுக்கவும், இலங்கை சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 110 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க வலுவான தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
Read more:
துவரம் பருப்பு உற்பத்தி ஆகும் முக்கிய மாநிலங்களில் கொள்முதல் அதிகரிப்பு