ஓடி, ஓடி உழைத்து சேமித்தப் பணத்தை, தகுந்த திட்டத்தில் முதலீடு செய்து, பெருந்தொகையைப் பெற வேண்டும் என நினைக்கும் மூத்த குடிமக்களா நீங்கள்? அப்படியானால் இந்த சேமிப்புத் திட்டம் உங்களுக்குத்தான்.
பொதுவாகவே அஞ்சலக சேமிப்புத் திட்டங்களுக்கு, வங்கிகளைக் காட்டிலும் அதிக வட்டி வழங்கப்படுகிறது. இதன் காரணமாகவே கிராமப்புற மக்கள் அஞ்சலகங்களில் சேமிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில், வி. ஆ.எஸ் எனப்படும் விருப்ப ஓய்வுதாரர்கள் (Voluntary Retirement Scheme VRS), மற்றும் ஓய்வு பெற்ற மூத்த குடிமக்களின் பணத்திற்கு பாதுகாப்பையும், அதே சமயத்தில் முதிர்வுத் தொகையாகப் (Maturity) பெருந்தொகையையும் வழங்கும் திட்டமே Senior Citizens Saving Scheme (SCSS).
தகுதி (Qualify)
இந்த சேமிப்புக் கணக்கைத் தொடங்குபவராக இருந்தால், நீங்கள் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருத்தல் வேண்டும். இதன்மூலம் வாழ்நாள் முழுவதும் நீங்கள் சேமித்தத் தொகை சிதறிவிடாமல், மீண்டும் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது.
அதேநேரத்தில் VRS (Voluntary Retirement Scheme) வாங்கியவர்களும் இந்தத் திட்டத்தின் சேமிக்கத் தகுதியுடையவர்கள்.
5 ஆண்டுகளில் ரூ.14 லட்சம் (Rs.14 lakhs in 5 years)
நீங்கள் ஓய்வு பெற்றபோது கிடைத்தத் தொகையில் இருந்து 10 லட்சம் ரூபாயை இந்த சேமிப்புத் திட்டத்தில், முதலீடு செய்தால் போதும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு 7.4% என்ற கூட்டு வட்டி அளிக்கப்படுகிறது. இதனுடன் சேர்த்து 5 ஆண்டுகள் நிறைவுடையும்போது, 14 லட்சத்து28 ஆயிரத்து 964 ரூபாய் முதிர்வுத்தொகையாக வழங்கப்படும். அதாவது 4 லட்சத்து 28 ஆயிரத்து 964 ரூபாய் வட்டியாக வழங்கப்படுகிறது.
எப்படி கணக்கு தொடங்குவது?(How to open)
குறைந்த பட்சம் ரூ.1000 செலுத்தி இந்தத் திட்டத்தின் கீழ், சேமிப்புக் கணக்கை அஞ்சலகங்களில் தொடங்கலாம். இதில் 15 லட்சம் ரூபாய்க்கு மேல் கையிருப்பு வைக்க முடியாது. ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலுத்த விரும்பினால், செக் (Cheque) எனப்படும் காசோலை மூலமே பணத்தை செலுத்த முடியும்.
முதிர்வுக் காலம் (Maturity Period)
Senior Citizens Saving Schemeல் முதலீடு செய்யப்படும் தொகையின் முதிர்வுகாலம் 5 ஆண்டுகள். ஒருவேளை முதலீட்டாளர் விரும்பினால், முதிர்வுக்காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்துக்கொள்ளலாம். அது அவருடைய விருப்பத்தைப் பொருத்தது.
வரி விலக்கு (Tax Exemption)
இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் தொகைக்கு வருமானவரிச் சட்டம் 80Cயின் கீழ் விலக்கு அளிக்கப்படுகிறது. அதேநேரத்தில், SCSS திட்டத்தில், ஆண்டு வட்டி 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் போகும்போது டிடிஎஸ் (TDS) பிடித்தம் செய்யப்படும்.
மேலும் படிக்க...
மானிய விலையில் நெல் விதைகள் - வாங்கிப் பயனடைய உடுமலை விவசாயிகளுக்கு அழைப்பு!
நச்சுன்னு உடல் எடையைக் குறைக்கனுமா? உணவில் நெய் சேர்த்துக்கோங்க!