தமிழ்நாடு அரசு பதிவுத்துறையில் 'ஸ்டார் 3.0' மென்பொருள் அறிமுகம் செய்ய அரசாணை வெளியீடப்பட்டுள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.
பதிவுத்துறையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரால் முன்னோடித் திட்டமாக 06.02.2000 முதல் அறிமுகப்படுத்தப்பட்ட 'ஸ்டார்' திட்டம் தற்போது பல்வேறு பரிணாம வளர்ச்சிகள் அடைந்து கணினிமயமாக்கலில் பதிவுத்துறையை ஒரு முன்னோடியாகத் திகழ வைத்துள்ளது என செய்திக்குறிப்பில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பதிவுத்துறையில் வழங்கப்பட்டு வரும் அனைத்து சேவைகளும் இணையதள அமைப்பிலான 'ஸ்டார் 2.0' திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
323.45 கோடி செலவில் ஸ்டார் 3.0 திட்டம்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவின்படி பதிவுத்துறையின் கணினிமயமாக்கல் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. இதனடிப்படையில் தற்போதுள்ள 'ஸ்டார் 2.0' திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சேவைகளில் செயற்கை நுண்ணறிவு (AI), மெஷின் லேர்னிங், பெருந்தரவு பகுப்பாய்வு முதலான மேம்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப உத்திகளை உட்புகுத்துதல், சான்றிட்ட நகல் மற்றும் வில்லங்க சான்று முதலான சேவைகளை தானியங்கி முறையில் தன்னிச்சையாக தயாரித்தல் முதலான பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப திட்டங்களைச் செயல்படுத்தும் விதமாக ரூ.323.45 கோடி செலவில் 'ஸ்டார் 3.0' திட்டம் அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட 12.07.2023 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை கண்காணிப்பதற்காக தலைமை செயலாளரின் தலைமையிலான மாநில அளவிலான குழுவும், செயல்படுத்துவதற்காக பதிவுத்துறை தலைவர் தலைமையிலான திட்ட செயலாக்க குழுவும் உருவாக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்திற்கென திட்ட ஒருங்கிணைப்பாளரைத் தேர்ந்தெடுக்கவும், திட்ட ஆலோசகர்கள் இருவரை நியமிக்கவும், இத்திட்டத்தின் செயல்திறன், செயல்பாடு மற்றும் பாதுகாப்பு முதலானவற்றைத் தணிக்கை செய்ய மூன்றாம் தரப்பு தணிக்கையாளர்களை அடையாளம் காணவும் பதிவுத்துறை தலைவருக்கு அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முழுமையான வன்பொருள்,மென்பொருள், பணியமைப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்படவுள்ள 'ஸ்டார் 3.0' திட்டமானது பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கு எளிய, வெளிப்படையான, பாதுகாப்பான மற்றும் துரிதமான மற்றும் உயர்தரத்திலான சேவைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தான் பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மாற்றம் செய்யப்படவில்லை என ஆவண பதிவு, பதிவு செய்யப்படும் ஆவணத்தினை பாதுகாத்தல், மின்னணு சாதனத்திலிருந்து ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற சேவைகளைப் பொருத்து கட்டண வீதங்களை மாற்றியமைத்தது பதிவுத்துறை.
அதன்படி ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20-லிருந்து ரூ.200 ஆகவும், குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மேண்ட் பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் ரூ.4000- த்திலிருந்து ரூ.10,000 எனவும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
தக்காளி, கத்தரி, வெண்டை விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுக்கோள்