இந்த ஆண்டிற்கான மரக்கன்று நடும் திட்டத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் 71 லட்ச மரக்கன்றுகளை நடும் திட்டத்திற்காக 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மாநில அரசு ரூ 198.57 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பசுமையை பரப்பும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டமானது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு , அதன் படி ஊராட்சி நிலங்கள், அரசு நிலங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பூங்காக்கள் மற்றும் காலி இடங்களில் தொடர்ந்து நடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
இந்த வருடத்திற்கான திட்டத்தில் 71 லட்ச மரக்கன்றுகளை 100 நாள் திட்டத்தின் கீழ் செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்திற்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வன மற்றும் சுற்றுசூழல் துறை உயரதிகாரிகளுடனான கூட்டம் நடைபெற்றது.
இதில் மொத்தம் 71 லட்ச மரக்கன்றுகளில் 64 லட்ச மரக்கன்றுகளை ஊரக மாற்று ஊராட்சி துரையின் மூலமாக நடவும், 7 லட்ச மரக்கன்றுகளை வனத்துறை மூலமாக நடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலமாக இத்திட்டத்தை செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் வனத்துறையினரால் நடப்படும் 7 லட்ச மரக்கன்றுகளுக்கான செலவினத்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.
கூலி தொகை
இந்த ஆண்டு நடப்படும் 71 லட்ச மரக்கன்றுகளுக்கான மொத்த நிதி தொகையானது ரூ 198.57 கோடி ஆகும். இதில் கூலி செலவாக ரூ 193.60 கோடியும், கருவிகளுக்கான வாடகை உள்ளிட்ட செலவினங்களுக்கு ரூ 4.97 கோடியும் செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூலி தொகையான ரூ 193.60 கோடி முற்றிலும் மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்படும் மற்றும் இதர செலவினத் தொகையில் 25 சதவீதம் மாநில அரசு ஏற்கும் என தமிழக அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரத்தின் நன்மைகள்
அதிகரித்து வரும் சுற்றுசூழல் சீர்கேடுகளுக்கு இடையில் மரக்கன்றுகளை நடுவது மிக அவசியமாக அமைந்துள்ளது. அனைத்து இடங்களையும் இன்றைக்கு பிளாட் போட்டு விற்று கொண்டிருக்கின்றனர். விவசாயிகளின் வாழ்விடம் அழிந்து வருவது நீடித்து கொண்டே இருந்தால் இன்னும் சில காலங்களில் தமிழகம் பாலைவனமாகிவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.
மரம் நடுவதால்
தூய்மையான காற்று, நல்ல மழை, பறவைகள் சரணாலயம், மண் அரிப்பை தடுக்கும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும், பூ, காய், கனி போன்ற உணவு வகைகள், இயற்கை உரம், இயற்கை சீரழிவை தடுக்கிறது உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை மரம் நமக்கு வழங்கி வருகிறது. இயற்கைக்கு பாதுகாப்பான மரத்தை வளர்ப்பது நமக்கும் நல்லது நமது சந்ததியினருக்கும் நல்லது.
K.Sakthipriya
Krishi Jagran