உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ”இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சுற்றுச்சூழல் செயல்பாட்டு தரவரிசை” தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழகம் 21-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலைக் காப்பதற்கு நாம் செய்யவேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்கான ஒரு நாளாக இன்றைய தினம் உலக சுற்றுச்சூழல் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (CSE- Center for Science and Environment) மற்றும் டவுன் டு எர்த்(Down to Earth) இதழால் வெளியிடப்பட்ட ‘தி ஸ்டேட் ஆஃப் இந்தியாவின் சுற்றுச்சூழல் 2023 இன் புள்ளிவிவரங்கள் அறிக்கையின்படி, ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் செயல்திறனில் முன்னணி மாநிலமாக தெலுங்கானா முதலிடம் பெற்றுள்ளது.
காடுகளின் பரப்பளவினை அதிகரிப்பதில் குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் நகராட்சி கழிவுகளை சுத்திகரிப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு கணக்கெடுக்கப்பட்டது. இந்தியாவிலுள்ள 29 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் வனப்பகுதி விரிவாக்கத்தில் பத்தில் ஏழுக்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்ற ஒரே மாநிலமாக தெலுங்கானா மட்டுமே உள்ளது.
தெலுங்கானா பெற்ற மொத்த மதிப்பெண்கள் 7.21. இதன் தொடர்ச்சியாக குஜராத் மற்றும் கோவா ஆகியவை 6.5 மற்றும் 6.3 மதிப்பெண்களுடன் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.
தென்மாநிலங்களில் பின்தங்கிய தமிழகம்:
மறுபுறம், பீகார், நாகாலாந்து மற்றும் ராஜஸ்தான் ஆகியவை சுற்றுச்சூழல் செயல்திறன் அடிப்படையில் கடைசி மூன்று இடங்களை பெற்றுள்ளன. தென் மாநிலங்களில், ஆந்திரப் பிரதேசம் 6-வது இடத்தையும், கேரளா 8-வது இடத்தையும், கர்நாடகா 18-வது இடத்தையும், தமிழ்நாடு 21-வது இடத்தையும் பெற்றுள்ளன. சுற்றுச்சூழல் துறையில் தெலுங்கானா அரசு மேற்கொண்ட சாதனைகளும் கடந்த காலங்களில் அங்கீகாரம் பெற்றுள்ளன.
2022 ஆம் ஆண்டில், தென் கொரியாவில் நடைபெற்ற சர்வதேச தோட்டக்கலை விவசாயிகள் சங்கத்தின் (AIPH) உலக பசுமை நகர விருது வழங்கும் விழாவில், ஹைதராபாத் உலக பசுமை நகர விருது மற்றும் பொருளாதார மீட்பு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான லிவிங் கிரீன் விருதினை பெற்றது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பொறுப்பேற்றது முதல் காலநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறு சில முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அதில் பிளாஸ்டிக்குக்கு மாற்றாக மீண்டும் மஞ்சப்பை இயக்கம், அலையாத்தி காடுகளை மீட்டுருவாக்குதல், கடற்பசு பாதுகாப்பகம், வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு, தமிழ்நாடு ஈரநில இயக்கம் போன்ற திட்டங்களும் அடங்கும்.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள தரவரிசை பட்டியலில் தென்மாநிலங்கள் அளவில் தமிழக அரசு பின் தங்கியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழக அரசு தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் அதே வேளையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான முன்னெடுப்புகளை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் காண்க:
2-வது முறையாக பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைப்பு- அமைச்சர் சொன்ன தகவல்!