சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் நடப்பு நிதியாண்டின் மீதமுள்ள காலகட்டத்தில், பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனங்களின் பதிவு நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் அவதியடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் பெருகி வரும் வாகனங்களிலிருந்து வெளிவரும் புகையினால் பல பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. இதனையடுத்து பல்வேறு நகரங்களும் எதிர்கால எரிபொருள் இருப்பினை கவனத்தில் கொண்டும் மற்றும் காற்று மாசுபாட்டினை குறைக்கும் வகையில் மின்சார வாகனங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன. பெட்ரோல் போன்றவற்றில் இயங்கும் வாகனங்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சண்டிகரில் வாகனப் புகையால் ஏற்படும் மாசுபாட்டை குறைப்பதற்கான மின்சார வாகனக் கொள்கை கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. கொள்கையின்படி, பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனங்களின் விற்பனை படிப்படியாக குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனங்களுக்கான பதிவில் குறிப்பிட்ட சதவீதம் எட்டப்பட்ட நிலையில், நடப்பு நிதியாண்டின் மீதமுள்ள காலத்திற்கு புதிய பெட்ரோல் வாகன பதிவுகள் கடந்த 10-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பான உத்தரவை, சண்டீகர் வாகனப் பதிவு மற்றும் உரிமம் வழங்கல் ஆணையம் பிறப்பித்துள்ளது.
இதனால், பெட்ரோலில் இயங்கக் கூடிய புதிய இருசக்கர வாகனங்களை வாங்கியுள்ளவர்கள், தங்களது வாகனங்களைப் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன விற்பனை முகவர்களும், பொதுமக்களும் அவதியடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக, இருசக்கர வாகன விற்பனை முகவர் ஒருவர் கூறுகையில், 'சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் உத்தரவு தன்னிச்சையானது; எவ்வித நடைமுறை சிக்கல்களையும் கருத்தில் கொள்ளாமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மின்சார இருசக்கர வாகனங்களின் உற்பத்தி குறைவாகவே உள்ள நிலையில், அவற்றை விற்குமாறு நிர்வாகம் எப்படி வற்புறுத்த முடியும்? மின்சார இருசக்கர வாகனங்களுக்கான மின்னேற்று நிலையங்களும் சொற்ப அளவிலேயே இருக்கின்றன. அதிலும் பல நிலையங்கள் செயல்படாமல் உள்ளன. இருசக்கர வாகனங்கள்தான் பலரின் வாழ்வாதாரத்துக்கு முக்கியத் தேவையாக உள்ள நிலையில், நிர்வாகத்தின் உத்தரவு வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது' என குறிப்பிட்டுள்ளார்.
சண்டிகர் மின் வாகனக் கொள்கையின்படி, 2024-2025 ஆம் நிதியாண்டில் இருந்து மின்சாரமில்லாத இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் பதிவை முற்றிலுமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திலும் சில தினங்களுக்கு முன் அரசு சார்பில் புதிய மின்வாகன கொள்கை வெளியிடப்பட்டது. அதன்படி தமிழக அரசு, சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய 6 நகரங்களை மின் வாகன நகரங்களாக அறிவித்துள்ளது. இந்த நகரங்களில் உள்ள பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களை அடுத்த 10 ஆண்டுகளில் முழுவதுமாக மின்சார வாகனங்களாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:
விவசாயத்துறையில் இளைஞர்கள் அதிகளவில் பங்களிக்கவும்-ஒன்றிய அமைச்சர் தோமர் வேண்டுக்கோள்
உலகை அச்சுறுத்த காத்திருக்கும் பறவை காய்ச்சல் -விலங்குகள் நல நிபுணர்கள் எச்சரிக்கை