ஆஸ்திரேலியாவில் வுத் வேல்ஸ், விக்டோரியா மாகாணங்களில் விற்கப்படும் ஸ்ட்ராபெர்ரி பழத்தினுள் ஊசி இருந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் சூப்பர் மார்கெட் ஒன்றில் வாங்கப்பட்ட ஸ்டிராபெர்ரி பழத்தின் உள்ளே ஊசி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதன் பின் சிட்னி, தாஸ்மானியா, நியூ சவுத் வேல்ஸ் போன்ற இடங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றன. இதுவரை இதுபோல் சுமார் 20 சம்பவங்கள் நடந்துள்ளன.
அதன் காரணமாக ஸ்டிராபெர்ரி பழங்கள் தொடர்பாக ஆஸ்திரேலியா முழுவதும் மக்கள் மத்தியில் பீதி பரவியுள்ளது. இந்த பிரச்சனை காரணமாக ஊசி கண்டெடுக்கப்பட்ட ஸ்டிராபெர்ரிகளை விற்பனை செய்த 6 பிராண்டுகள் தங்கள் பழங்களை மார்கெட்டுகளில் இருந்து திரும்ப பெற்றன.
நியூசிலாந்திலும் இந்த பீதி பரவியதால் ஆஸ்திரேலிய ஸ்டிராபெர்ரிகளை வாங்கப்போவதில்லை என அந்நாட்டு உணவு விநியோகிஸ்தர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் ஸ்டிராபெர்ரி விற்பனை சரிந்துள்ளது. அதன் காரணமாக ஆஸ்திரேலிய விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
20க்கும் மேற்பட்ட ஸ்ட்ராபெர்ரி பெட்டிகளில் ஊசிகள் கண்டு பிடிக்கப்பட்டன. ஸ்ட்ராபெர்ரி மட்டுமல்லாமல் வாழைப்பழம், ஆப்பிள் ஆகிய பழங்கள் உள்ளேயும் ஊசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய பழங்களின் விற்பனையை முடக்குவதற்காகவே இதனை சில விஷமிகள் செய்துள்ளதாக புகார்கள் எழுந்தன.
‘‘இவ்வாறு உணவில் கலப்படம் செய்யும் கோழைகளுக்கு வழக்கமாக அளிக்கும் 10 ஆண்டு சிறைதண்டனையை 15 ஆண்டுகளாக உயர்த்தும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். ஆஸ்திரேலியா நாடாளுமன்றம் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்’’ என்று தொலைகாட்சி மூலம் மக்களிடம் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறினார்.
ஸ்ட்ராபெர்ரி பழங்களில் கலப்படம் செய்து ஊசி சொருகப்பட்டு இருந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஒருவரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.