
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பூம்பிடாகை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 5 மாதங்களாக ஆசிரியர் இல்லாததால் மாணவர்கள் தாங்களாகவே கற்கும் அவல நிலை உள்ளது. இப்பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் 2 ஆண்டுகளுக்கு முன் காலமானார். உதவி ஆசிரியரும் பள்ளிக்கு வரவில்லை. பள்ளி துவங்கி 5 மாதங்களாகியும் இதுவரை ஆசிரியர் நியமிக்கப்படவில்லை.
தானாக கற்கும் மாணவர்கள் (Students studying for self)
ஆசிரியர்கள் வராவிட்டாலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை நிறுத்தவில்லை. இதை அறிந்த கிராமத்து பட்டதாரி இளைஞர்கள் அவ்வப்போது வந்து பாடம்
நடத்தி மாணவர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர். மதிய உணவு (Lunch) வழங்கப்படுகிறது. இளைஞர்கள் வராத நேரங்களில் மாணவர்கள் தாங்களாகவே பாடங்களை கற்கின்றனர். சில மாணவர்கள் பள்ளிக்கு வராமல் ஆடு மாடு மேய்க்கவும், வீட்டு வேலைகளை செய்தும் எதிர்கால வாழ்க்கையை வீணாக்கி வருகின்றனர்.
கேள்விக்குறியாகும் கல்வி
கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளதால் மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இங்கு ஆசிரியர்களை நியமிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவக்குமார் நரிக்குடி வட்டார கல்வி அலுவலர்: இங்கு பணியாற்றிய பொறுப்பு ஆசிரியர் சரிவர பள்ளிக்கு வராமல் விருப்ப ஓய்வில் செல்வதாக தெரிவித்தார். பள்ளிக்கு வராத நாட்களை பூர்த்தி செய்ய பணிக்கு வர வேண்டும் என கேட்டோம். அப்படியிருந்தும் அவர் பணிக்கு வரவில்லை. அவரது சம்பளத்தை பிடித்தம் செய்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுழற்சி முறையில் (Rotational) நான்கு ஆசிரியர்களையும் நியமித்தோம். மாவட்டத்தின் கடைக்கோடியில் இருப்பதால் போக்குவரத்தை காரணம் காட்டி அவர்களும் பணிக்கு வரவில்லை என்றார்.
மேலும் படிக்க